ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர்

🕔 October 3, 2021

– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) –

கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப்.

காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை புரிந்தார். அதன்பிறகுகு ‘சிலோன் நிர்வாக சேவை’யில் (Ceylon Administrative Service) இணைந்து 1999ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை, பல உயர் பதவிகளை வகித்தார். ஓய்வு பெற்ற பின்னரும் UNHABITAT போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களில் பல வருடங்கள் பணி புரிந்தார்.

இயந்திரத்தனமாக மாறிய உலகில் இதயங்களுக்கு வேலை இல்லாமல் போன கால கட்டத்தில், நிர்வாக சேவை அதிகாரியாகவும், பொறுப்புள்ள குடும்பஸ்தனாகவும் இருந்து கொண்டு உணர்வோடு ஊறிப்போன மண்சார்ந்த கதைக்களங்களை ஜுனைதா ஷெரீப் உருவாக்கினார். பலரும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றே நீண்ட காலம் நினைத்திருந்தனர். அவரது புனைப் பெயரில் தனது மனைவியின் பெயரையும் (ஜுனைதா) இணைத்திருந்தார்.

நிர்வாக சேவை அதிகாரியாக இருந்தமையினால் அவரது சொந்தப் பெயரில் கருத்துக்களை அல்லது படைப்புக்களை வெளியிடுவதில் இருந்த – சில மட்டுப்பாடுகள் காரணமாக, மனைவியின் பெயரை சேர்த்து புனைப்பெயர் உருவானது. ஈற்றில் அதுவே அவருக்கு சர்வதேச அளவில் அடையாளமாக மாறியது

கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்வியல் தனித்தன்மை கொண்டதாகும். இங்குள்ள மக்களின் வாழ்வியலில் நெய்தலும் மருதமும் முல்லையும் இரண்டறக் கலந்தவை. இப்படிப்பட்ட பன்முகப் பூமியிலிருந்து வட்டார இலக்கியத்தினை அள்ளி வழங்கிய பெருமை மறைந்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் அவர்களையும் சாரும்.

ஜுனைதா ஷெரீபைப் பொறுத்தவரை, பேச்சுத் தமிழ் மிக முக்கியம் எனக் கருதினார். நாட்டுப்புறப் புனைவு இலக்கியங்கள் பேச்சுத் தமிழில் அமைந்தவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்; கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். வாசகர்களை சென்றடைவதில் வட்டார வழக்கு – இலகு தன்மை கொண்டது என்பதனை அவரது படைப்புக்களில் தாராளமாகக் காண முடியும்.

மட்டக்களப்பு கச்சேரியில் பணிபுரிந்த காலத்தில் அங்கு இயங்கி வந்த நாடகக்குழு ஒன்றின் தலைவரான அவரது நண்பரிடம், மேடை நாடகமொன்றினை ஜுனைதா ஷெரீப் எழுதிக் கொடுத்திருந்தார். கதை பொருத்தமற்றது எனக் கூறித் தட்டிக் கழித்த நண்பர், மறைமுகமாக அதன் பிரதியை வானொலிக்கு அனுப்பி ஒலிபரப்பப்பட்ட பின்னர், குறித்த இலக்கியத் திருட்டினை ஜுனைதா ஷெரீப் அறிந்து வருந்தினார். இருப்பினும் தனக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதனை அறிந்து கொண்டு தனது எழுத்துலகப் பிரவேசத்தை ஆரம்பித்தார்.

‘சந்தூக்கு’ எனும் நாடகம் ஒன்றினை முதன் முதலில் வானொலிக்கு அவர் அனுப்ப -அது ஒலிபரப்பப்பட்டது. பின்னர் அவரது ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் நின்றுவிடாமல் தினகரன், வீரகேசரி, தினபதி போன்ற பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது நாமம் எழுத்துலகில் நிலைபேறாக மாறிவிட்டது. இலங்கைத் தமிழ் இலக்கிய வெளியில் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஜுனைதா ஷெரீப் மிளிர்கிறார்.

அவர் நாவல் எழுதத் தொடங்கிய அனுபவம் சற்று வித்தியாசமானது. அவருடைய தந்தையை கண் சத்திர சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் 10 நாட்கள் வைத்திருந்து, இரவு பகல் விழிக்க வேண்டி அவருக்கு ஏற்பட்டது. அப்போதுதான் நீண்ட இரவு வேளைகளில் ‘அவன் ஒன்று நினைக்க’ என்ற நாவலை எழுத ஆரம்பித்தார். 1971 இல் அது மித்திரனில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது (20) நாவல்கள் ஆகியனவற்றைப் படைத்திருக்கிறார். ‘சாணைக்கூறை’, ‘பெரிய மரைக்கார், சின்ன மரைக்கார்’, ‘ஜனநாயகம்’, ‘சூனியத்தை நோக்கி’ என்பன மிகவும் பிரபலமான அவரது படைப்புக்களுள் சிலவாகும். அவரின் பல நாவல்கள் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய ரீதியாகவும், வடக்கு கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், கலாபூஷண் விருது, 2019ஆம் ஆண்டுக்கான அரச இலங்கிய விருது மற்றும் இலங்கிய வித்தகர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

‘சாணைக்கூறை’ எனும் நாவல், 1980களுக்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்து அறியக் கிடைக்கும் இலக்கியப் படைப்புகளுள் முக்கியமானதாகும். இந்த நாவலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சமூக, கலாசார அம்சங்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்படுவதாகவும் அக்கால மக்களின் மூட நம்பிக்கைகள், அறியாமை என்பவற்றினை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. சாணைக்கூறை நாவல் பல்கலைக்கழக ஆய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். ‘சாணைக்கூறை’ நாவல் ஏற்படுத்தும் உணர்வு ரீதியான தாக்கம் வார்த்தைகளில் வரையறுத்து விட முடியாதது.

தனது வட்டார எழுத்துக்களின் புழுதி வாசங்களில் ஜுனைதா ஷெரீப் கலந்திருக்கிறார். அவரின் எழுத்துக்களின் வழியாக அவர் மணத்துக் கொண்டேயிருப்பார்.

தொடர்பான செய்தி: புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்