இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

🕔 September 25, 2021

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது.

வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின் முக்கிய இனங்கள் பற்றிய இந்த அவதானிப்பு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்படி ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்களவர்களுடன் இலங்கை தமிழர்களை விடவும், இலங்கை முஸ்லிம்கள் பெரிய மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முஸ்லிம்களை விட சிங்களவர்கள்தான் தமிழர்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக நம்பப்பட்டது” என, தலைமை ஆராய்ச்சியாளர் டொக்டர் கயானி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நம்பப்படுவது போல் இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றவில்லை என்றும், அவர்கள் இந்தியாவில் இருந்து தோன்றியதாகவும் டொக்டர் கயானி கல்ஹேன மேலும் கூறியுள்ளார்.

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தமிழர்கள் 0.4% வித்தியாசத்தைக் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்