தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

🕔 September 24, 2021
வாசிகசாலைக் கட்டடம் அமைந்திருந்த காணி

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்’ எனும் தலைப்பில் கடந்த 13ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக – உரிய இடத்துக்குச் சென்று ‘புதிது’ செய்தித்தளத்தினர் ஆராய்ந்ததில், பல்வேறு விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன.

தற்போது இடித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாசிகசாலையானது அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட போதும், அது தனியார் காணியொன்றிலேயே கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது.

காணி சொந்தக்காரர்கள் வாக்குமூலம்

திராய்க்கேணியைச் சேர்ந்த காளிக்குட்டி தம்பிப் பிள்ளை என்பவரின் காணியில், குறித்த வாசிகசாலைக் கட்டடத்தை 1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் நிர்மாணித்ததாக, காணி உரிமையாளரின் மகன் திருச்செல்வம் மற்றும் மனைவி நேசம்மா ஆகியோர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினர்.

அரச செலவில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாயின், அரச காணியொன்றில் அல்லது அரசுக்குச் சொந்தமாக்கப்பட்ட காணியொன்றிலேயே அக் கட்டடம் அமைக்கப்படுதல் வேண்டும்.

ஆனால், திராய்க்கேணியில் அரச செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டடமானது, தனியார் ஒருவரின் காணியில் நிர்மாணிக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்ட காணி உரிமையாளரின் மனைவி நேசம்மா என்பவர், அந்தக் காணியை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாகக் கூறுகின்றார்.

அதன்படி நேசம்மாவிடமிருந்து காணியைக் கொள்வனவு செய்த நபர்களே, தற்போது அந்தக் காணிக்குள் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடத்தை இடித்து அழித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

யார் பொறுப்பு?

அரச நிதியில் வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்ட குறித்த காணியை, அதன் சொந்தக்காரரிடமிருந்து சட்டரீதியாகப் பெற்றுக் கொள்ளாமல், அக் காணியில் சட்டத்துக்கு முரணாக அரச கட்டடமொன்று அமைக்கப்பட்ட போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக யூ.எல்.ஏ. அஸீஸ் என்பவரே கடமையாற்றினார் என்றும், இந்த விடயத்துக்கு அவரே பொறுப்புக் கூறவேண்டியவர் எனவும் அறிய முடிகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக இறுதியாகக் கடமையாற்றிய நிலையில், தற்போது அஸீஸ் – ஓய்வு நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் தொடர்பில், 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் திராய்க்கேணியில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நல்லரட்ணம் என்பவரை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசியபோது, வாசிகசாலை அமைப்பபட்ட காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும், அது அரசுடமையாக்கப்படவில்லை எனவும் கூறினார்.

நேசம்மா என்பவரின் கணவருக்குச் சொந்தமான காணியிலேயே குறித்த வாசிகசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டதாகவும் அப்போதைய கிராம சேவை உத்தியோகத்தர் மேலும் குறிப்பிட்டார். காரைதீவில் வசிக்கும் நல்லரட்ணம் – தற்போது கிராம சேவை உத்தியோகத்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சிக்கல்கள்

இது போன்று தனியார் காணிகளில் அரச செலவில் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டடங்கள் திராய்க்கேணியில் உள்ளன.

இதனால், அங்கு பாரிய முரண்பாடுகளும் சட்டச் சிக்கல்களும் தோன்றியுள்ளன.

தனியார் காணியொன்றில் அரச கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதாயின் குறித்த காணியை அதன் உரிமையாளரிடம் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக மாற்றுக் காணியொன்றினையோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட பணத் தொகையினையோ அரசு வழங்க வேண்டும். அல்லது தனியாரின் காணிணை அரசு சுவீரிக்கவும் முடியும்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் எழுத்து மூலம், சட்ட ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவை எதனையும் செய்யாமல் தான்தோன்றித்தனமாக தனியாரின் காணியில் அரச கட்டடங்களை நிர்மாணிப்பதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் மீது – சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.

அதற்கான நடவடிக்கைகளையும் ‘புதிது’ செய்தித்தளம் மேற்கொள்ளும்.

தொடர்பான செய்தி: திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்