திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

🕔 September 13, 2021

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலைக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டடம் அமைந்திருந்த காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு, அச்சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட சிலர் இணைந்து கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

‘பிரதேச சபைக்கு உரித்தான காணிகள், கட்டிடங்களை பாதுகாக்குமாறு கோரல்’ எனும் தலைப்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கு முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட ஐவர் இணைந்து மேற்படி கடிதத்தை எழுதியுள்ளனர்.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘பாலமுனை 06ம் கிராம சேவகர் பிரிவிலுள்ள திராய்க்கேணி கிராமத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான காணிகள் பல காணப்படுகின்றன. இக்காணிகளில் பல்வேறு அத்துமீறல் குடியிருப்புக்களும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதில் முதலாவது காணியாக, மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரபினால்அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான அரச காணியில் வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்டது.

இப்பகுதி மக்கள் இதனை பல வருடங்களாக வாசிகசாலை மற்றும் பொதுத் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் மேற்படி அரச காணியும், அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் என்பன ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இந்த நிலையில் மேற்படி அரச கட்டடம் – கடந்த சில தினங்களுக்கு முன்னர் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது இந்நடவடிக்கை இக்காணியினை ஆக்கிரமிப்பு செய்தவரின் தன்னகப்படுத்தும் நடவடிக்கை என சந்தேகிக்கின்றோம்.

அத்தோடு, திராய்க்கேணியில் பொதுப் பூங்காவுக்காக – க. கந்தகுட்டி என்பவரால் (உறுதி இலக்கம் 4128) 1995ம் ஆண்டு நன்கொடையாக பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட காணியும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிரதேச சபைக்கு முஹம்மது ஆலிம் நூஹ்லெவ்வை என்பவர் நன்கொடையாக (உறுதி இலக்கம் 21) 1996ம் ஆண்டு பிரதேச சபைக்கு வழங்கிய காணியிலும் அத்துமீறல் நடைபெற்றுள்ளதாக அறிகிறோம்.

அத்தோடு, பிரதேச சபைக்கு வேலுப்பிள்ளை சோமசுந்தரம் என்பவரால் (உறுதி இலக்கம் 15675) 1965ம் ஆண்டு வழங்கிய இரண்டு றூட் காணியானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், அரச நிதியில் 1995ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட சுகாதார நிலைய கட்டிடம் தற்பாது தனிநபரினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பிரதேச சபைக்கு சொந்தமான திராய்க்கேணி கிராமத்தில் உள்ள காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற போது, பிரதேச சபை போதிய நடடிவக்கை மேற்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

எனவே அரச காணிகள், அரச கட்டிடங்கள் துஷ்பிரயோகம் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அரச காணிகளைப் பாதுகாக்குமாறும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம்’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்