வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 August 27, 2021

ப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

“இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்” என்று ஜோ பைடன் கூறினார்.

காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு இதுவரை சுமார் 01 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் தலிபான்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.

தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் அளவுக்கதிகமான கூட்டம் இருந்தது. விமான நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்ற ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் கூட்டம் குறையவில்லை.

“பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது” என்று ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

தலிபான்களால் திறந்துவிடப்பட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று பைடன் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறிய ஐஸ்எஸ்ஐஎஸ் -கே என்ற பயங்கரவாத இயக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.

“மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம்” என்றார் அவர்.

மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க படையினரும், சுமார் 1000 பிரிட்டன் படையினரும் உள்ளனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்