காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

🕔 August 26, 2021

ப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது வெளிவரும் தகவல்களை விட அதிகமாகலாம் என அஞ்சப்படுவதாக ஆப்கானிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி கூறுகிறார்.

இந்த தாக்குதல்கள் குறித்து இதுவரை கிடைத்த தகவல்கள் பின்வருமாறு;

  • காபூல் நகரில் இன்று 26ஆம் திகதி மாலை 5.45 மணியளவில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.
  • முதலாவது தாக்குதல் ‘அப்பி’ வாயில் பகுதியிலும் மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் ‘பேரன்’ விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகள்தான் மேற்கு நாடுகளுக்கு பயணம் செல்லும் அகதிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்க ஒதுக்கப்பட்ட இடமாகும்.
  • இன்றைய தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிந்தைய படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
  • தாக்குதல் நடந்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • காபூல் விமான நிலைய பகுதியில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • காபூல் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர். அவசரகால மீட்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் தமது நாட்டின் அவசரகால நடவடிக்கைகளை விவாதிக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
  • பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்தவர்களோ அல்லது பிரிட்டன் அரசு அதிகாரிகளோ இந்த தாக்குதலில் பலியாகவில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சு தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது. பிரிட்டன் படைகள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
  • காபூலில் துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இரண்டும் நடத்தப்பட்டதாக பிபிசியின் பாதுகாப்புத் துறை செய்தியாளர் பிரான்க் கார்டனர் தெரிவித்துள்ளார்.
  • காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது என சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் செய்தியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
  • ஆப்கானிஸ்தானின் டோலோ என்ற செய்தி ஊடகம், காபூல் விமான நிலை வாயிற் கதவருகே ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.
  • இந்த தாக்குதலில் இதுவரை 52 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், பலர் பலியாகியிருப்பதாகவும் தலிபான் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக ஆப்கன் உள்ளூர் தொலைக்காட்சியான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
  • காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக அங்கு எத்தனை பேரை வெளியேற்ற முடியுமோ அதில் மட்டுமே எங்களுடைய கவனம் இருக்கும்,” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்