தலைப்புச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை தலிபான் கைப்பற்றியது

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நகரம் முன்பொரு காலத்தில் தலிபான்களின் வலுவான கோட்டையாக திகழ்ந்தது. மேலும் முக்கிய வணிக இடமாக இருப்பதால் கேந்திர அளவில் முக்கியத்துவம் பெற்றதாகவும் இந்நகரம் உள்ளது.

நேற்று வியாழனன்று பல நகரங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்திலிருந்த பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற 3000 படையினரை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் பொது மக்கள் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறைகளுக்கு பயந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கிட்டதட்ட இந்த வாரம் மட்டும் 72 ஆயிரம் குழந்தைகள் அடைக்கலம் தேடி தலைநகர் காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பலர் வீதிகளில் உறங்குவதாக ‘சேவ் தி சில்ரன்’ என்ற அமைப்பு தெரிவிக்கிறது.