
அரசாங்கத்தை விட்டும் வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் யாரும் கூறவில்லை என, அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தின் உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குரிய பொருத்தமான நேரம் இதுவல்ல எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருந்தால்” என, இதன் போது ஊடகவியலாளர்கள் கேட்டபோது; “மைத்திரிதான் இதற்கு பதில்கூற வேண்டும்” என நிமல் கூறினார்.
மேலும் அமைச்சரவையை மறுசீரமைக்கும் எந்தவொரு திட்டம் குறித்தும் தனக்குத் தெரியாது என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கள் குறித்து, அந்தக் கட்சி திருப்தியடைகிறதா என, அவரிடம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு; “எந்த அமைச்சும் நல்ல அமைச்சுத்தான்” என அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் தொழில் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவி வகிக்கின்றார்.



