கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

🕔 July 20, 2021

ரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது.

பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதனையடுத்து, இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, உதயகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த அபேவர்த்தன தெரிவித்தார்.

முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் ‘பல்டி

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்களித்த போதும், அக்கட்சியின் ஏனைய 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோரே வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

எம். முஷாரப், இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோரே இவ்வாறு எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால், இன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்றைய தினம் ஆளுந்தரப்பினரை இவ்விவகாரம் தொடர்பில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்