அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

🕔 July 10, 2021
செயலாளர் அஷ்சேய்க் றஹ்மதுல்லா

– அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இடப்பட்டுள்ள கையொப்பம் தன்னுடையதில்லை எனவும், அது ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டு மோசடியாக வைக்கப்பட்டுள்ள கையொப்பமெனவும் தெரிவித்து, பள்ளிவாசல் சம்மேளத்தின் செயலாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மதுல்லா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிரை – அவர் வகிக்கும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு, அக்கரைப்பற்றிலுள்ள சில பிரதேசவாதிகள் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளின் பின்னணியில் சூழ்ச்சியொன்று நடைபெற்று வரும் நிலையிலேயே, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.

வைத்திய அத்தியசட்சகர் ஜவாஹிருக்கு எதிராக, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதமொன்று தொடர்பில் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததோடு, சமூக வலைத்தளங்களில் அந்தக் கடிதத்தின் பிரதியும் பகிரப்பட்டிருந்தது.

குறித்த கடிதமானது – பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் மற்றும் செயலாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மதுல்லா ஆகியோரின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் சம்மேளனத் தலைவர் சபீஸ் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ‘கையெழுத்திட்டார்’ (Signed) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, செயலாளர் றஹ்மதுல்லா கையெழுத்திட வேண்டிய இடத்தில் அவரின் வழமையான கையெழுத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த கடிதத்தில் தான் கையெழுத்திடவில்லை என்றும், தனது கையெழுத்து ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மோசடியாக வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் றஹ்மதுல்லா முறையிட்டுள்ளார் என தெரியவருகிறது.

வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக நடந்து கொண்டிருப்பது வைத்தியசாலையின் உள்ளக விவகாரம் என்றும், அது – அங்குள்ள வைத்தியர்கள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கை மட்டுமே எனவும் சிலர் கூறி, இந்த விவகாரத்தில் பிரதேசவாதம் மற்றும் அரசியல் எதுவும் கிடையாது என வாதிட்டு வரும் நிலையிலேயே, இவ்வாறானதொரு மோசடி அம்பலமாகியுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான சூழ்ச்சியின் பின்னணி தொடர்பில் தொடர்ந்தும் ‘புதிது’ செய்தித்தளம் இன்னும் பல்வேறு விடயங்களை ஆராய்ந்து அம்பலப்படுத்தத் தயாராக உள்ளது.

அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதம்

தொடர்பான கட்டுரை: அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்