பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு

🕔 June 24, 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் ‘அரப்’ நியூஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும் அது நிறைவேற்றப்படவில்லை. 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம், நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும், சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாத காலம் வரையில், நபர் ஒருவரை தடுத்துவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம்.

எனினும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் அல்லது கைவிடப்படும். இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்றையும் நிபுணர்கள் குழுவொன்றையும் அமைச்சரவை நியமித்துள்ளது.

இந்த இரு குழுக்களின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே, இது குறித்து தீர்மானிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் தங்கள் பரிந்துரைகளை இந்த குழுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டமானது; மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீறுவதால் அதனை நீக்கவேண்டும் என, கடந்த ஜூன் 08ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை உடனடியாக நீக்க வேண்மென வேண்டுகோள் விடுத்த ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ரத்துச்செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையல் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பற்ற விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்