றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

🕔 June 23, 2021

– மப்றூக் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் இவ்வாறு விலகியுள்ளார் என, றிசாட் பதியுதீன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

குறித்த மனு மீதான பரிசீலனை இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் உச்ச நீதிமன்றில் மூன்று பேரைக் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே – நீதியரசர் திலீப் நவாஸ் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

அந்த வகைியல், மேற்படி மனு மீதான பரிசீலனையில் இருந்து இதுவரையில் மூன்று நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

நீதியரசர்கள் யசந்த கோட்டாகொட, ஜனக டி சில்வா ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 03 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனு மீதான பரிசீலனை எதிர்வரும் ஜுலை 05ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்