தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

🕔 May 11, 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –

க்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கைது செய்யப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதனைத்தான் செய்திருப்பார்கள். மட்டுமல்லாது தாருஸ்ஸலாமில் கொலைகளும் நடந்திருக்கலாம் என்பது கசப்பான உண்மையாகும்.

இந்த விடயத்தில் உலகின் முதன்மை பயங்கரவாதியினால் கைது செய்யப்படுகின்ற தங்கள் உறுப்பினர்களை விடுவிப்பதற்காக பாலஸ்தீனர்கள் கையாளுகின்ற தந்திரோபாயங்களை நாங்கள் புரட்டிப்பார்க்க வேண்டும்.

இஸ்ரேலிய இரானுவத்தினர்களினால் சிறைபிடிக்கப்படுகின்ற பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவதென்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போன்றது. விடுதலையின்றி ஆயுள் முழுவதும் சிறையில் வாடுவதும், சிறையிலேயே மரணிப்பதும் சாதாரண சம்பவங்களாகும்.  

இதன் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட தங்கள் உறுப்பினர்களை அல்லது அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலிய ராணுவத்தினர்களை கடத்திச் சென்று இஸ்ரேலிய அரசுக்கு நிபந்தனை விதிப்பதன் மூலம் விடுவிக்கச்செய்வது பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் மேற்கொள்ளுகின்ற தந்திரோபாயங்களாகும்.

சில நேரங்களில் மொசாட் அமைப்பின் முக்கியஸ்தர்களும் ஹமாஸ் இயக்க போராளிகளிடம் வசமாக மாட்டிக்கொண்ட வரலாறுகளும் உள்ளது.

1997 இல் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் அவர்களை கொலை செய்வதற்காக ஜோர்டானில் இருந்த ஹமாஸ் இயக்க காரியாலயம் முன்பாக இரண்டு மொசாட் உளவாளிகள் ரசாயன பதார்த்தத்தை தெளித்தனர். ஸ்தளத்திலேயே காலித் மிஷால் அவர்கள் கோமா நிலைக்கு சென்றார்.  

உடனடியாக காலித் மிஷாலின் மெய்ப்பாதுகாவலர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டதனால் இரண்டு இஸ்ரேலிய கொலையாளிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட இரண்டு கொலையாளிகளும் சாதாரணமானவர்கள் அல்ல. மொசாட் அமைப்பில் விசேட பயிற்சி பெற்ற நிபுணர்கள். இது இஸ்ரேலுக்கு பாரிய தலையிடியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரையும் ஹமாஸ் இயக்கம் ஒரு கேடயமாக பயன்படுத்தியது.   

ஏற்கனவே இஸ்ரேலினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹமாஸ் இயக்க தலைவர் ஷேக் அஹமத் யாசீன் அவர்களையும், இன்னும் பல உறுப்பினர்களையும் விடுவிக்குமாறு ஹமாஸ் இயக்கம் நிபந்தனை விதித்தது. வேறுவழியின்றி தலைவர் சேக் அஹமத் யாசீன் உட்பட பலரை இஸ்ரேலிய அரசு விடுவித்தது.

ஹமாஸ் உறுப்பினர்கள் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான பணமும், பதவிகளையும் பெற்றிருக்கலாம். ஆயுள் முழுவதும் பாதுகாப்புடன் அமெரிக்காவில் சொகுசாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை இஸ்ரேலிய அரசு செய்திருக்கும்.

அல்லது சேக் அஹமத் யாசீன் அவர்கள் இஸ்ரேலினால் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்பு அவர் விடுவிக்கப்படுவது சாத்தியமற்ற நிலையில், வேறு தலைவரை தெரிவு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் கொள்கையின்பால் வளர்க்கப்பட்டவர்கள். தங்கள் உயிர்களை இழந்து தனது சமூகத்தையும், தலைவரையும் வாழ்விக்க நினைப்பவர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் கொள்கையினால் வளர்க்கப்படவில்லை. தனது சமூகம் பற்றிய தூரநோக்கும், போதிய அரசியல் அறிவும் இல்லை. இதனால் பெரும்பாலானவர்கள் தங்களது அரசியல் எஜமானர்களுக்கு கூஜா தூக்குகின்ற சந்தர்ப்பவாதிகளாகவே உள்ளனர்.

எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் தலைவர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்குகின்ற அதேவேளை, யார் அதிகமாக பணம் வழங்குகின்றார்களோ அவர்களுக்கு தேர்தலில் வாக்குகளை வழங்குகின்ற நிலையே மக்களிடம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தலைவரின் விடுதலைக்காக தங்களது கட்சியின் பிரமுகர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இதயசுத்தியுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்