கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

🕔 May 2, 2021

– மப்றூக் –

டகு ஒன்றில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் இருவர், மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவர்களின் சடலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டன.

அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குப் பலியாகினர்.

கடந்த செவ்வாய்கிழமை (27ஆம் திகதி) சாய்ந்தமருதிலிருந்து பெரிய படகு ஒன்றில் மீன்பிடிப்பதற்காக அன்சார், அர்சாத், அன்பர் மற்றும் நௌசாத் ஆகியோர் கடலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் நால்வரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கடலில் சுமார் ஒரு வார காலம் தங்கி – இவர்கள் மீன் பிடிப்பது வழமையாகும்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் கடலில் மின்னல் தாக்கியதில் படகிலிருந்த அன்சார் மற்றும் அர்சாத் ஆகியோர் மரணமடைந்தனர். ஏனைய இருவரும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இறந்தவர்களின் உடல்களும் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு- சட்ட நடவடிக்கைகளின் பின்னர், சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டன.

என்ன நடந்தது?

கரையிலிருந்து கிளம்பி நான்காவது நாள் (வெள்ளிக்கிழமை) காலை, கடலில் மழை பெய்து கொண்டிருந்த போது – இந்த சம்பவம் நடந்ததாக, அந்த படகில் பயணித்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஏ. நௌசாத் (31 வயது) தெரிவித்தார்.

நௌசாத்

“வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்து, கடலில் போட்டிருந்த வலைகளை படகில் ஏற்றுவதற்குத் தயாரானோம். அப்போது கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது.

வாழைச்சேனை கடலில் இருந்து – கரைக்கு வருவதற்கு 14 மணித்தியால பயண தூரத்தில் அப்போது எங்கள் படகு கடலில் நின்றிருந்தது.

சிறிதளவு வலைகளை படகில் ஏற்றிய நிலையில், தேநீர் தயாரித்து குடித்தோம், கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கடுமையான காற்று வீசியதால் நாம் படகின் உள்ளே வந்தோம். அன்சார் படகின் வெளிப் பகுதியில் நின்றிருந்தார். அவரை உள்ளே அழைத்தோம், படகில் வலை கொழுவியுள்ளதால் அதனை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதனால் நாங்களும் படகின் வெளிப் பகுதிக்கு வந்தோம்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ‘படார்’ என்று வெடிப்பது போல் ஒரு சத்தம் கேட்டது. நான் உணர்விழந்து விட்டேன். சற்று நேரத்தின் பின்னர்தான் கண் விழித்தேன். என் முன்னால் அன்சாரும், அருகில் அர்சாத்தும் விழுந்து கிடந்தார்கள். ‘அழ்ழாஹ்’, ‘அழ்ழாஹ்’ என்று கத்தினேன்.

படகின் உள்ளே வந்து பார்த்தபோது இயந்திரப் பகுதியில் புகையாக இருந்தது. ‘எஞ்சின்’ வெடித்துச் சிதறி விட்டதாக நினைத்துக் கொண்டேன். எங்கள் படகு எரிந்து விடுமோ என்கிற பயத்தில் – படகின் இயந்திரத்துடன் தொடர்புபட்ட ‘வயர்’களை துண்டித்து விட்டேன்.

காலை 8.00 மணியிருக்கும். எங்கள் படகுக்கு அருகில் இன்னொரு படகு நிற்பதைக் கண்டு அதனை அழைத்தேன், அந்தப் படகில் இருந்தவர்களில் இருவர் எங்கள் படகுக்கு வந்தனர். கடலில் கிடந்த எங்கள் வலைகளயும் எங்களையும் மரணித்தவர்களின் சடலங்களையும் ஏற்றிக் கொண்டார்கள். வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் சாய்ந்தமருது கரைக்கு நாங்கள் திரும்பினோம்” என்றார் சம்பவத்தில் உயிர் பிழைத்த நௌசாத்.

மேற்படி நால்வரும் குறித்த படகில் கடந்த 04 வருடங்களாக கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே நேற்று, இந்த துக்ககரமான சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் விவரம்

இந்த சம்பவத்தில் அன்சார் மற்றும் அர்சாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான அன்சார்

அன்சார் (42 வயது) என்பவர் – நான்கு பிள்ளைகளின் தந்தை. 20 வருடங்களாக இவர் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே கடலில் மின்னல் தாக்கி இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மரணித்த மற்றைய நபரான 32 வயதுடைய அர்சாத், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் 12 வருட கடற்றொழில் அனுபவத்தைக் கொண்டவர்.

உயிரிழந்த அர்சாத்

உயிர் பிழைத்தோர் நிலை என்ன?

குறித்த சம்பவத்தில் உயிர் பிழைத்த நௌசாத் மற்றும் அன்பர் ஆகியோர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் அன்பர் என்பவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த அன்சார் இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களின் உடல்கள்: படம் – நூருல் ஹுதா உமர்

முற்பாதுகாப்பு நடவடிக்கை

பெரிய படகுகளில் கடலுக்குச் செல்வோர் – காலநிலையை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக, அந்தப் படகுகளில் ‘டப்’ (Tab) ஒன்று பொருத்தப்பட்டு அதில் ‘அப்’ (app) ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்கிறார் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.எம். நஜாத். குறித்த ‘அப்’ (app) மூலம், காலநிலை எதிர்வுகூறல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

“கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் அடித்தால், அதில் பயணிப்போர் படகை நிறுத்தி விட்டு, படகில் கயிற்றைக் கட்டி, அந்தக் கயிற்றைப் பிடித்தவாறு கடல் நீரில் மிதக்க வேண்டும். இதுதான் கடலில் மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கையாகும்” எனவும் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் நஜாத் கூறினார்.

இதேவேளை, கடற்தொழிலுக்குச் செல்வோர் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்கள் காப்புறுதி செய்திருந்தால் இழப்பீட்டுப் பணத்தை அவர்களின் குடும்பத்தவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நஜாத் குறிப்பிட்டார்.

“கடற்றொழிலாளர்கள் இரு வழிகளில் காப்புறுதி செய்ய முடியும். அந்த வகையில் ஒவ்வொரு கடற்றொழிலாளரும் தத்தமக்கென காப்புறுதி செய்யலாம். இந்தக் காப்புறுதியை செய்யும் ஒருவர் கடற்றொழில் நடவடிக்கையின் போது மரணித்தால், அவரின் குடும்பத்தவர் 10 லட்சம் ரூபா நஷ்டஈட்டைப் பெறலாம். மற்றைய காப்புறுதியானது படகு மற்றும் அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்குச் சேர்த்து, படகின் உரிமையாளர் செய்யும் காப்புறுதியாகும். இவ்வாறான காப்புறுதியைப் பெறுபவர் மரணிக்கும் போது, அவரின் குடும்பத்தவருக்கு 01 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்” எனவும் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் நஜாத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கடற்கரை

Comments