சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

🕔 April 1, 2021

ஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், மற்றையவர் திஹாரியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

மேற்படி இருவரும் சஹ்ரானுடைய கொள்கைகளை இணையம் ஊடாகப் பரப்பியதா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் கட்டாரில் தொழில் புரிந்த நிலையில் கடந்த நொவம்பர் மாதம் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கட்டாரில் இருந்த போது, சஹ்ரானின் போதனைகளைப் பரப்புவதற்காக வாட்ஸப் குழு ஒன்றை உருவாக்கியிருந்தனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து சில மணித்தியாலங்களின் பின்னர் இவர்களில் ஒருவர் – சஹ்ரான் பிரார்த்தனையில் ஈடுபடுகின்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நால்வரில் ஏனைய இருவரும் சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் – மூதூரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூதூரை வசிப்பிடமாகக் கொண்ட 37 மற்றும் 38 வயதுடைய நபர்களாவர்.

சஹ்ரானின் போதனைகளை மாணவர்களுக்குப் பரப்புவதற்காக 2018ஆம் ஆண்டு, மேற்படி இருவரும் வகுப்புகளை ஏற்பாடு செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

(நன்றி: கொழும்பு கசற்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்