தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?

🕔 March 28, 2021

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மலினப்படுத்தும் வகையில், அந்தக் கட்சிக்குள்ளிருப்போரே, நேரடியாகப் பேசி வருவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் போது, அங்கிருந்து சிலர் படம் காட்டுகின்றனர் எனவும் இதன்போது ஹக்கீம் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்;

“இவர்கள் தேவையில்லாமல் பேசி தலைவரை வம்புக்கிழுக்கின்றனர். இதன் பின்னணி என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆட்சியாளர்களின் போக்குத் தெரிந்த ஆள் நான்.

வலிய வம்புக்கிழுத்து கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் உள்ளனர்.

அபிவிருத்திகளைச் செய்யாமல் கட்சி உறுப்பினர்களைப் பாதுகாக்க முடியாது என்கிற அங்கலாய்ப்பில் சிலர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் சுத்தவாளிகளாக ஆகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, என்னை வம்புக்கிழுக்கின்றனர்.

கட்சி பலரை அலங்கரித்திருக்கிறது. பெரிய பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். இதனூடாக அவர்கள் அவர்களை அலங்கரித்திருக்கிறார்களா? அல்லது அவர்கள் கட்சிக்கு அலங்காரமாக இருந்திருக்கிறார்களா? என்பதை கட்சித் தொண்டர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சியதிகாரத்தின் அணுசரனை எவ்வளவும் இருக்கலாம். ஆனால் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால், தொண்டர்களின் அங்கீகாரம் இருக்க வேண்டும். தலைமையின் ஆசிர்வாதம் இல்லாமல் தொண்டர்களின் அங்கீகாரம் கிட்டுமா என்பதைப்பற்றியும் அவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

யாரையும் அவசரப்பட்டு விரட்டுவதற்கும் நான் விரும்புவதில்லை. அவர்களாகவே விரட்டப்படுவதற்கான வழியை தேடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்றார்.

மேற்படி உரையில் யாருடைய பெயரையும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் குறிப்பிடவில்லை என்கிற போதும், அவர் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் குறித்தே பேசினார் என்பதை, முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குறித்து தெரிந்தவர்கள் அறிவார்கள்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக சில காலங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஹாபிஸ் நஸீர் வழக்குத் தொடுத்திருந்தார் என்பதும், அதனால், அச்சமயம் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

அதனை நினைவுபடுத்தும் பொருட்டே; “வலிய வம்புக்கிழுத்து கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் உள்ளனர்” என, ரஊப் ஹக்கீம் பேசியதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்பான செய்தி: ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்