மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்

🕔 March 28, 2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – அமைச்சரவையில் முன்வைத்த இரண்டு மாற்று யோசனைகள் குறித்து கடந்த வாரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவு அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலுக்கு பின்னர், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான இரண்டு மாற்று யோசனைகளை உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் கடந்த வாரத்தில் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தினை நீக்கி பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்துவது மற்றும் புதிய சட்டத்தினை திருத்தம் செய்து கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இரண்டு யோசனைகளே இவ்வாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பின்னர் தேர்தல் சட்ட மதிப்பாய்வு தொடர்பாக நாடாளுமன்ற தெரிவு குழுவினை நியமிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான யோசனை – சபை முதல்வர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்படவுள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்று மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்டம் குறித்த தெரிவுக்குழுவின் ஊடாக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறு இடம்பெற்றால் மாகாண சபை தேர்தல் மேலும் தாமதமடையும் என நம்பப்படுகின்றது.

Comments