
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான காலப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நான்கு மாலைதீவு நபர்கள் – தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட இரண்டு இலங்கையர்கள் மூலம், அவர்கள் சஹ்ரானுடன் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சரத் வீரசேகர இந்த விடயங்களை வெளியிட்டார்.
இதன்போது ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின் நிலைமையினையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.



