மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்

🕔 March 5, 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

‘நியூஸ் பெஸ்ட்’ வழங்கும் ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில், மு.காங்கிரஸ் தலைவரின் சகோதரர் ரஊப் ஹசீர், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கேள்” என்று ஒருமை வார்த்தையில் கூறியதாகவும், ஹரீஸ் மேற்படி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹசீர் அல்ல என்றும், அவர் தமக்கு உத்தரவிட முடியாது எனவும், ஹரீஸ் இதன்போது கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், அடுத்த தேர்தலின் போது- பாடம் கற்றுக் கொள்வார் என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் ஒரு தடவை கூறியிருந்தமையை இதன்போது நினைவுபடுத்திய ‘நியூஸ் லைன்’ நிகழ்ச்சி நடத்துநர்; “அடுத்த தேர்தலிலே மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிட உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகிறீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஹரீஸ்; “முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து நான் செயற்பட்டு வருகிறேன். கட்சியில் எனது வகிபாகத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. தேர்தலில் என்னை போட்டியிட முடியாது என, யாரும் சொல்லவும் முடியாது. என்னை போட்டியிட வேண்டாம் என கட்சி முடிவெடுக்க முடியாது. கட்சியின் தளம் கல்முனை” என்றார்.

தொடர்பான செய்தி: ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்