கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு

🕔 March 2, 2021

கொவிட் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு இரணைதீவு கத்தோலிக்கப் பங்குத் தந்தை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள மேற்படி பங்குத் தந்தை; அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து, நாளைய தினம் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் எடுத்துள்ள இந்தத் தீர்மானம் எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த தீர்மானத்துக்கு நாங்கள் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இரைணைதீவு ஒரு கத்தோலிக்க கிராமம். 1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து, 2018 ஆண்டு அங்கு மீண்டும் குடியேறினார்கள்.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றார்கள். மாதத்தில் ஒரு தடவை அங்கே திருப்பலி இடம்பெறுகின்றது. கடந்த 19ஆம் திகதி 20ஆம் திகதி, தவக்கால யாத்திரையை தியானத்தை அங்கு நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எனவே அப்படிப்பட்ட அந்த கிராமத்திலேயே இவ்வாறான செயலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டமை எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த செயற்பாட்டை மேற்கொள்ள பங்குத்தந்தை மற்றும் மக்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை கடுமையாக நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.

இரணைதீவு சுற்றிவர நீரோட்டமுள்ள ஒரு தீவாகும். இங்கு இறந்த உடல்களை அடக்கம் செய்கின்ற பொழுது, தொற்று மிக வேகமாக பரவும் என்பதை, ஏன் இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை.

இந்த தீவில் 135 அட்டைபண்ணைகள் உள்ளன. அதில் தொழில் செய்வோர் இங்கு தங்கியுள்ளனர். எனவே, இங்கு கொரோனா உடல்களை அடக்கம் செய்வது என்பது ஒரு பொருத்தமான செயலல்ல.

முஸ்லிம்கள் தங்களுடைய சகோதரர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற போது, அந்த உடல்களை அடக்கம் செய்ய, சில இடங்களை முன் மொழிந்துள்ளார்கள். எனவே, அரசசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏன் முதன்மைப்படுத்தவில்லை?

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாளை காலை 09 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.

ஆகவே தயவு செய்து இந்த தீர்மானத்தை நீங்கள் கைவிடுவது நல்லது. இல்லாவிட்டால் எங்களுடைய இந்த போராட்டம் தொடரும்” எனவும் இரணைதீவு பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்