முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

🕔 February 16, 2021

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மக்களிடமோ ஐக்கிய மக்கள் சக்தியிடமோ மன்னிப்பே கிடைக்காது எனவும் அவர் கூறினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்;

“கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமரின் அறிவிப்பை செயற்படுத்த முடியும். அதன் மூலம் முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி ஏனைய மதத்தை பின்பற்றும் மக்களும் பயனடைய முடியும்.

பிரதமர் பாராளுமன்றத்தில் கூறிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொருவர் கூறிக் கொண்டிருக்கும் கருத்துக்கள் இங்கு முக்கியமானவையல்ல. வைத்திய நிபுணர்கள் வழங்கிய பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியமையினாலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். கொரோனா சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பன முற்றிலும் வேறுபட்ட விடயங்களாகும். எனவே இவை இரண்டையும் இணைக்க முயற்சிக்க வேண்டாம் என்று முஸ்லிம் காங்கிஸுக்கு கூற விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு திருத்தம் என்பது கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டிய விடயமாகும். நாட்டை சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்வதே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும். அதன் காரணமாகவே கொள்கை ரீதியில் அதனை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்தது. எனவே தற்போது வெவ்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதால் பிரயோசனமில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி தற்போதும் எதிர்காலத்திலும் சர்வாதிகார தலைவரை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாயிற்று. அதேவேளை 19 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஜனநாயகத்தையும் அழித்து விட்டாயிற்று. எனவே இவர்களுக்கு மீண்டும் மன்னிப்பு கிடையாது.

ஐக்கிய மக்கள் சக்தியிடமும் இவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கிடையாது. எனவே இவ்வாறு பொய் கூறி அனைத்தையும் குழப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்