‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’: அறிமுகப்படுத்தியது வடகொரியா

🕔 January 15, 2021

‘உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்’ எனத் தெரிவித்து, ஏவுகணையொன்றினை என வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையினையே இவ்வாறு வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்த அணி வகுப்பில், இவ்வாறான சில ஏவுகணைகள் கொண்டு வரப்பட்டன என வட கொரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக, ஜோ பைடன் பதவியேற்கவுள்ள சில தினங்களுக்கு முன்பாக, வட கொரியா தன் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காதான் வட கொரியாவின் மிகப் பெரிய எதிரி என கிம் ஜாங் உன் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

வட கொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட படங்களில், அணிவகுப்பின் போது, வட கொரிய கொடியை மக்கள் உற்சாகத்தோடு அசைத்துக் கொண்டிருக்க குறைந்த பட்சமாக நான்கு வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான ஏவுகணைகள் இருப்பதை காண முடிகிறது.

ப்யொங்யொங் நகரில், கிம் இல் சங் சதுக்கத்தில் தரைப்படை துருப்புகள், பீரங்கிகளுடன் நடந்த இந்த அணிவகுப்பில், தோல் ஆடை கோட் மற்றும் கம்பளி வகை தொப்பி அணிந்து, சிரித்த முகத்துடன் கையை அசைத்தபடி கிம் ஜாங் உன் பங்கேற்ற படங்களும் வெளியாகியுள்ளன.

“வட கொரியாவின் புரட்சிகர ஆயுதப் படையின் பலத்தைக் காட்டும் விதத்தில், உலகின் சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகள் (submarine-launch ballistic missile), கிம் இல் சங் சதுக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்தன” என, வட கொரியாவின் அதிகாரபூர்வ அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 14) நடந்த இந்த வணிவகுப்பில், கடந்த ஒக்டோபர் மாதம், இதை விட பெரிய அணிவகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை intercontinental ballistic missile (ICBM) கொண்டு வரப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்