முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண

🕔 December 22, 2020

லங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்துள்ளார்.

கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

கொவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை இதுவரை மாலைதீவிடம் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலைதீவிடம் இலங்கை உதவியை கோரியதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தின் ஊடாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கொவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலைதீவு கவனம் செலுத்தியுள்ளமை, இந்த ட்விட்டர் தள செய்தியின் ஊடாக வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அந்த நாட்டு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்