அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம்

🕔 December 8, 2020

– முன்ஸிப் –

க்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையின் உள்வீதிகளில் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று தடுப்புகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கையானது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் என, இந்த நடவடிக்கை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு, இவ்விவகாரம் தொடர்பில் பேசியது.

இதன்போது தவிசாளர் கூறுகையில்; “அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லை உள்வீதிகளை போக்குவரத்துக்காக தடைசெய்யும் தீர்மானம் என்னுடையதல்ல.

இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சே சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அதில் பிரதேச செயலாளர், பெரிய பள்ளிவாசல் தலைவர், தவிசாளர் எனும் வகையில் நான் உட்பட, பல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டர்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி எஸ். அகிலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில்தான், இவ்வாறு வீதிகளுக்கு தடையேற்படுத்தும் தீர்மானம் அனைவரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவும் எடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்றில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆனால், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அது குறைவாகவும் மட்டுப்பட்டதாகவும் உள்ளது.

இந்த நிலையில், உள்வீதிகளால் அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கிடையில் கணிசமானளவு போக்குவரத்து நடைபெறுவதைக் காண முடிகிறது.

அதனால்தான் உள்வீதிகளை மூடுவதென இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், பிரதான வீதியை நாம் மூடவில்லை. அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனைக்கு இடையில் அவசரத் தேவைகளுக்காக போக்குவரத்து செய்ய வேண்டியிருப்பவர்கள் பிரதான வீதி ஊடாக பயணிக்கலாம்” என்றார்.

மேலும், இந்த விடயம் பற்றிய தெளிவில்லாமல் சிலர் தன்னை குற்றம் கூறுகின்றமை குறித்தும் தவிசாளர் கவலை வெளியிட்டார்.

இதேவேளை எதிர்வரும் மூன்று நாட்களில் அட்டாளைச்சேனையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாது விட்டால், அப் பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்குவது தொடர்பிலும் இன்று சுகாதார வைத்திய அதிகாரி கருத்து வெளியிட்டதாகவும் தவிசாளர் அமாலுள்ள மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்