முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு

🕔 December 5, 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா செய்துள்ளார்.

கொவிட் -19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தன்னால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து, தான் ராஜினாமா செய்வதாக கட்சியின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்ததாக அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையை தனது ராஜிநாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அலிசாஹிர் மௌலானா; ‘எமது கட்சி உறுப்பினர்களது நாடாளுமன்ற செயற்பாடுகள் மக்கள் மீதும், சமூகம் மீதும் கரிசனை இல்லாத சூழலில் இக்கட்சியோடு தொடர்ந்து பயணிக்க முடியாது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது மக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மேற்படி நாடாளுமன்ற பிரதிநிதிகளின் செயற்பாடுகள் குறித்து வேதனையடைவதாகவும், தனது ராஜிநாமா கடிதத்தில் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

01.12.2020 எனும் திகதியிட்டு மேற்படி கடிதத்தை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு அலிசாஹிர் மௌலானா அனுப்பி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த முறை தெரிவான அலிசாஹிர் மௌலானா; நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்