சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

🕔 December 4, 2020

ம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி மருந்தை தயாரித்த நபர், ஆயுர்வேதத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாதவர் என்றும் மேற்படி வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த மருந்தின் உற்பத்தி செயன்முறை குறித்தும் மேற்படி வைத்தியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டுமன்றி ஆயுர்வேத திணைக்களத்தில் உள்ள யோகா குறியீட்டு குழுவில் இந்த மருந்து பதிவு செய்யப்படவில்லை எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுபோன்ற பதிவு செய்யப்படாத மருந்தை ஏற்க முடியாது என்று, ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் ஆர் களுதிலக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ராவணன் மன்னன் காலத்தில் இந்த மருந்துக் கூட்டு பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று சான்றுகளுடன் நிரூபிக்க முடியாத ஒரு விடயத்தை, மேற்படி மருந்தை தயாரித்துள்ள தம்மிக்க பண்டார தொடர்ச்சியாக கூறி வருவதாகவும், பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19க்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் மேற்படி உற்பத்தியை, நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சோதனை முறையில் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்