அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

🕔 December 4, 2020

– அஹமட் –

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பிரதேச செயலகப் பிரிவுகளான அக்கரைப்பற்றில் அண்ணளவாக 07 ஆயிரம் குடும்பங்களுக்கும், ஆலையடிவேம்பில் 06 ஆயிரம் குடும்பங்களுக்கும், அட்டாளைச்சேனையில் 09 ஆயிரம் குடும்பங்களுக்கும் இவ்வாறு உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் பின்னர் – மேலும் 05 ஆயிரம் ரூபா பெறுமதியான மற்றொரு தொகைப் பொருட்களும் வழங்கப்படும் எனவும், அந்த வகையில் குடும்பமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

இதற்காக சுமார் 223 மில்லியன் ரூபாவை அம்பாறை மாவட்ட செலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களின் ஊடாக இந்த உதவிப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் மக்களுக்குப் பகிர்தளிக்கப்படவுள்ள மேற்படி பொருட்கள், அரசாங்கம் ஒதுக்கியுள்ள 05 ஆயிரம் ரூபாவுக்கு நிகரானவையாகவும், அவை ஆகக்குறைந்த சந்தை விலையில் கொள்வனவு செய்யப்பட்டவையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த காலங்களில் இவ்வாறு அரச நிதியில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட போது – தரமற்ற பொருட்களும், ஒதுக்கப்பட்ட பணத்தொகைக்கு குறைவான பொருட்களும் தமக்கு வழங்கப்பட்டதாக, மக்கள் புகார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments