பெட்டிக்கும் சாம்பலுக்கும் காசு கேட்கும் அரசு: குரூரத்தின் உச்சம்

🕔 November 28, 2020

சுஐப் எம். காசிம் –

முஸ்லிம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு இது புலப்படவுமில்லை.

இதனால், முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கை, அரசியல் வேள்வித் தீயில் புடம்போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. “எத்தனை தடவைகள் புடம்போட்டாலும், நெருப்பில் எரியமாட்டோம்” என்பதே நிரூபிக்கப்படுகிறது.

இருந்த போதும், இச்சமூகத்தின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கப்படவில்லை. நுண்ணுயிர் ஆய்வாளர்கள், புவியியல் நிபுணர்கள், வைத்திய விற்பன்னர்கள் மட்டுமல்ல, விஞ்ஞான வல்லுநர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதால் பாதிப்பில்லை என்று கூறி விட்டனர். எனினும், விஞ்ஞானமே நிரூபிக்காத ஒரு விடயத்தில், இனவாதம் விடாப்பிடியாக நிற்பதுதான், இச் சமூகத்தின் சமகால வலியாக உள்ளது.

வெறும் 18 பேரடங்கிய, இந்த மருத்துவக்  குழுவின் மனநிலைகளை, வெளிநாடுகள் மதிப்பிடுமளவு இக் குழுவின் கனதிகள் எடை குறைந்து வருகின்றன.

இது மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இருபது லட்சம் முஸ்லிம்களின் மன வலிகளில் பயணித்து, இனவாதிகளின் உள்ளங்களை மகிழ்விக்கத்தானா? இந்த விடாப்பிடி என்ற சந்தேகமும் இன்று எழுந்துள்ளது.

ஜனாஸாக்களை எரிப்பதில், சில அரசியல்வாதிகள் காட்டும் அக்கறை மற்றும் அதிகாரிகளின் நடத்தைகளே, இச் சந்தேகத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறது. கிரியைப் பெட்டிகளை வாங்குவதற்குப் பணம் அறவிடுவது, எரித்த சாம்பலை ஒப்படைக்க குடும்பத்தாரிடம் பணம் கோருவது, முஸ்லிம் சமூகத்தவரை மாத்திரம் குறிவைத்து சில அதிகாரிகள் செயற்படுவது, பீ.சீஆர் பரிசோதனை முடிவுகளில் செல்வாக்குகள் தலையிடுவது, எவ்வித அறிகுறிகளும் இல்லாது, வீட்டில் மரணித்தோரையும் பீசீஆர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதெல்லாம், முஸ்லிம் சமூகத்தின் கண்களைத் திறக்கச் செய்துள்ளன.

ஒன்றை மட்டும் இந்த இனவாதம் புரிந்து கொள்ளட்டும். ஆயுளின் கடைசிச் சந்தர்ப்பத்தைக் கூட மதக் கிரியைகளால், கௌரவப்படுத்த முடியாது போயிற்றே என்ற கையறுநிலைக் கதறலுக்குள், சாம்பலுக்கோ அல்லது சடங்குப் பெட்டிக்கோ, எந்த முஸ்லிமும் பணம் கொடுக்கப் போவதில்லை.

குளிப்பாட்டல், கபனிடல், தொழுவித்தல், நல்லடக்கம் செய்தல் என, இந்த நான்கு கடமைகளுக்கும் நான்காயிரம் ரூபாக் கூட செலவாவதில்லை. மேலும், கபன் சீலையைச் சிலர், ஹஜ்ஜுக்குச் செல்வோரிடமிருந்தே அழைத்து வரச் செய்வதுமுண்டு. இந்நிலையில், இதையும் விடக் குறைந்த செலவே, ஜனாஸாவை நல்லடக்கம் செய்யத் தேவைப்படும்.

இப்போது, இந்தக் கொரோனாச் சூழலில் கடைசிக் கடமைக்காக மட்டுமே முஸ்லிம் சமூகம் மன்றாடுகிறது. இதுவும், கிடைக்காத நிலையில், எரித்தலுக்கு அல்லது சாம்பலுக்குப் பணம் கொடுக்க எந்த முஸ்லிமும் முன்வரப் போவதுமில்லை. அவ்வாறு கொடுத்தால் எரித்தலுக்கு இணங்கியதாகப் பொருள்படுமே.

இருப்பினும், சாம்பலையாவது தாருங்களென்று இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  கேட்டதையும் இனவாதம் தூக்கிப்பிடிக்கவே செய்கிறது. என்ன செய்வது? கை விரியக் கொடுத்தவனும் கஷ்ட காலத்தில் கையேந்துவதில்லையா? கை சேதப்படுவதில்லையா?
முஸ்லிம் சமூகத்தின் இந்த ஆழமான மத நம்பிக்கை, இனவாதத்தின் மனச்சாட்சியைத் தொடவில்லையே. இதுதான், இச்சமூகத்தின் சமகால வலிகள்.

அடக்கம் செய்வதை விட்டுக் கொடுக்க முடியாதுதான். “காலத்தை திட்டாதீர்கள். காலம் அல்லாஹ்வாக இருக்கும்”  என்பதற்கேற்பவே ஆரம்ப காலத்தில் இவ்வாறு கோரப்பட்டது. எனவே, எரித்தலைச் சாதகமாகப் பயன்படுத்தி, புதிதாகத் தழைக்கவுள்ள பணச் சூதாட்டத்துக்கு, இனவாதம் இடமளிக்கப் போகிறதா? இல்லை, எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நல்லடக்கத்துக்கு அனுமதிக்கப் போகிறதா? மருத்துவ நிபுணத்துவ குழுவின் கையிலுள்ள முடிவு  இது.

விஞ்ஞானத்தை விஞ்சியது மெய்ஞ்ஞானம் என்ற கருத்தியலுடன் விஞ்ஞானம் மோதித் தர்க்கிக்கும் நவீன காலமிது. சரி, விஞ்ஞானத்துக்கு மதிப்பளித்தாவது, விஞ்ஞானத்தால் விண்ணைத் தொட்ட உலக நாடுகளில், நடப்பதைப் போன்று இலங்கையிலும் நல்லடக்கம் சாத்தியப்படத்தான், முஸ்லிம் சமூகம் பிரார்த்திக்கிறது.

இது வரைக்கும் கொரோனாவினால் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். இவர்களில், எத்தனை பேர் மூன்றாம் சமூகத்தினரோ? அத்தனை பேரும் “காலத்தை திட்டாதீர்கள்” என்ற இறை கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்கட்டும். இவர்கள் தவிர, இனி முஸ்லிம் சமூகத்தினர் இறந்தால் அவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதில்தான், வலிகள் விலகும் பாதைகள் தென்பட உள்ளன.

‘இருபதை’ ஆதரித்தமை இந்தப் பாதையை எதிர்பார்த்துத்தான். இதற்காக முஸ்லிம் சமூகத்துக்குள் இவர்கள் விமர்சிக்கப்படுவதும் சமகால வலிகள்தான் . மக்களுக்காக அல்லது சமூக நலனுக்காக, தற்துணிவில் முடிவெடுக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்கிறதே. இந்தப் பார்வை, இந்த எம்பிக்களை ஆதரிக்க வைத்திருக்கலாம்.

ஆனால் ஆதரித்தும் அனுமதி கிடைக்காத வலிகள் ஆதரித்தோருக்கும், அனுமதி கிடைக்கும் முன் ஆதரித்து விட்டார்களே  என்ற வலிகள் முஸ்லிம் சமூகத்தவருள்ளும் அதிர்ந்த வண்ணமிருக்கின்றது

நீதித்துறைக்கும் இவ் விடயம் சென்றுள்ளதால்  இதிலாவது நியாயம் கிடைக்குமென்ற எச்ச சொச்ச  எதிர்பார்ப்புக்களும் இல்லாமலில்லை. ஏலவே இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மூலம் நல்லடக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை கிடைத்ததாக வெளிவந்த கதைகளும் தொக்கி நிக்கின்றன.  

உலக நாடுகளில் இல்லாததையா? முஸ்லிம் சமூகம் கேட்டு மன்றாடுகிறது. உலக முஸ்லிம்களுக்கு விஞ்ஞானம் வழங்கிய அனுமதிதானே இலங்கையிலும் கோரப்படுகிறது. இந்த மன்றாட்டத்தை, நாட்டு நலனுடன் ஒத்துழையாத போக்கு என நாட்டின் அதியுச்ச அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ளக்கூடாதென்ற புரிதலுக்காகவும்  இருபது ஆதரிக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, வீண் வியாக்கியானங்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்து களையப்படுவது அவசியம். இச் சமூகம் எதிர்கொள்ளும் சமகால வலிகளில், வீண் விமர்சனங்கள், அரசியல் மற்றும் மத ரீதியான அபிப்பிராய பேதங்களும் நெஞ்சடைக்கும் சமூக வலிகளாகவே உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்