பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

🕔 November 25, 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று விசாரணைகளை நடத்தியது.

பிபிசி சிங்கள சேவைக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை ஒளிபரப்பு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு இதன்போது விசாரணைகளை நடத்தியது.

இதன்போது, சாட்சி வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவை தொடர்பில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.

தான் வழங்கிய பேட்டியை, திரிவுப்படுத்தி, பிபிசி சிங்கள சேவை ஒளிபரப்பு செய்துள்ளதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

ஊடக தர்மத்தை மீறி, பிபிசி நிறுவனம் செயற்பட்டதாகவும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

தான் ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்பதை, பிபிசி நிறுவனம் ஒளிபரப்பு செய்துள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு, பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம் இரண்டு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக தர்மத்தை மீறவில்லை என கூறியுள்ள ஷேலி உபுல் குமார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை திரிவுப்படுத்தி ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் நடத்திய பேட்டியின் பின்னர், அவர் கோபப்படும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றதா என பொலிஸார், ஊடகவியலாளரிடம் வினவியுள்ளனர்.

விளம்பரம்

அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என கூறிய ஷேலி உபுல் குமார, சந்திப்பின் பின்னர் தான் முன்னாள் ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றை எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் – தான் முன்னாள் ஜனாதிபதியை பாராளுமன்றத்திலேயே கண்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் கூட புகைப்படமொன்றை தான் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியதுடன், குறித்த புகைப்படத்தை பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.

நன்றி: ட்ரூ சிலோன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்