ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

🕔 November 8, 2020

மெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது.

இப்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகிறார் அவரது மனைவி, ஜில் பைடன்.

ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார்.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், 1990களில் தாம் ஆங்கில ஆசிரியராகப் பாடம் நடத்திய ஒரு வகுப்பறையில் (தற்போது காலியாக உள்ள நிலையில்) நின்றுகொண்டு ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றினார் அவர்.

தமது கணவர் ஏன் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்கான வாதங்களை அவர் அடுக்கினார். பிறகு பேசிய ஜோ பைடன், முதல் சீமாட்டி ஆவதற்கு அவரிடம் உள்ள குண நலன்களை பாராட்டிப் பேசினார்.

“நாடு முழுவதும் உள்ள மக்களே, உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மிகப் பிடித்தமான கல்வியாளர் ஒருவரை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருவரே ஜில் பைடன். அத்தகைய ஒரு முதல் சீமாட்டியாக ஜில் பைடன் இருப்பார்” என்று அவர் கூறினார்.

சரி ஜில் பைடன் பற்றி நமக்குத் தெரிந்தவை என்ன?

நியூ ஜெர்சி மாநிலத்தில் 1951 ஜூன் மாதம் ஜில் ஜேகப்பஸ் ஆகப் பிறந்தார் அவர். பெற்றோரின் ஐந்து மகள்களில் மூத்தவர். ஃப்ளடெல்ஃபியா நகரின் புறநகர்ப் பகுதியான வில்லோ குரோவ் என்ற இடத்தில் வளர்ந்தார்.

ஜில்லுக்கு ஜோ இரண்டாவது கணவர்.

அவரது முதல் கணவர் கல்லூரி கால்பந்து வீரர் பில் ஸ்டீவன்சன்.

ஜோ பைடனுக்கும் இவர் இரண்டாவது மனைவிதான். அவரது முதல் மனைவியும் ஒரு வயது மகளும் 1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் இறந்தனர். பியூ, ஹண்டர் என்ற அவரது இரு மகன்களும் அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தனர்.

அப்போது பிழைத்த இந்த இருவரில், பியூ பைடன், தமது 46வது வயதில் 2015ம் ஆண்டு மூளைப் புற்று நோயால் இறந்தார்.

அந்த விபத்து நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஜோவின் சகோதரர் தம்மை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறுகிறார் ஜில் பைடன். அப்போது அவர் செனட்டராக இருந்தார்.

“அப்போது நான் ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்ட பையன்களோடு மையல் கொண்டிருந்தேன். இவர் ஸ்போர்ட்ஸ் கோட், ஷூ போட்டுக்கொண்டு என் வாசலுக்கு வந்தார். கடவுளே… மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் இவரோடு நமக்கு ஒத்துவராது என்று நினைத்தேன். அவர் என்னைவிட 09 வயது மூத்தவர். நாங்கள் இருவரும் ஒரு ஆணையும் பெண்ணையும் பார்க்க ஃபிளடெல்ஃபியாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றோம்.” என்று Vogue தளத்துக்கு கூறியுள்ளார் ஜில்.

ஐந்து முறை ஜோ காதலை சொன்ன பிறகே தாம் அவரை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் ஜில்.

“ஜோவின் பிள்ளைகள் மீண்டும் ஒரு தாயைப் பெற்று இழக்கக்கூடாது. எனவே 100 சதவீதம் உறுதி செய்துகொண்டு முடிவெடுக்க விரும்பினேன்” என்று விளக்கினார் அவர்.

இந்த ஜோடி 1977ம் ஆண்டு நியூயார்க் மாநகரில் திருமணம் செய்துகொண்டது. இவர்களது மகள் அஷ்லே 1981ல் பிறந்தார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் தமது கணவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக்க ஒப்புக் கொண்டு பேசியபோது, தங்கள் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் சந்தித்த போராட்டங்கள் பற்றியும் ஜில் பைடன் பேசினார்.

“இந்த நாட்டை ஜோ பைடனிடம் நாம் ஒப்படைத்தால், இந்தக் குடும்பத்துக்கு அவர் செய்ததை உங்கள் குடும்பங்களுக்கும் செய்வார். அதாவது நம்மை ஒன்றாக்குவார், முழுமையாக்குவார், தேவையான நேரத்தில் முன்னோக்கி கொண்டு செல்வார். அமெரிக்காவின் உறுதிமொழியை நம் எல்லோருக்காகவும் அவர் காப்பாற்றுவார்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் பணி

தற்போது 69 வயதாகும் ஜில் பைடன் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒரு இளநிலைப் பட்டமும், இரண்டு முதுநிலைப் பட்டங்களும் பெற்றவர். அத்துடன் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2007ம் ஆண்டு கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் ஜில்.

வாஷிங்டன் செல்லும் முன்னர் ஒரு சமுதாயக் கல்லூரியில், ஒரு பொது உயர்நிலைப் பள்ளியில், வளர் இளம் பருவத்தினருக்கான உளவியல் மருத்துவமனை ஒன்றில் கல்வி போதித்திருக்கிறார் இவர்.

டெலாவேர் நகரில் பிராந்திவைன் உயர் நிலைப்பள்ளியில் 1991 முதல் 1993 வரை தாம் ஆங்கிலம் போதித்த வகுப்பறை ஒன்றில் இருந்துதான், அவர் தம் கணவரை வேட்பாளராக அறிவித்த ஜனநாயகக் கட்சி மாநாட்டில் உரையாற்றினார்.

ஜோ பைடன் துணை ஜனாதிபதி பணியாற்றியபோதுகூட அவர் நார்த்தர்ன் விர்ஜினியா கம்யூனிட்டி காலேஜில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

“ஆசிரியர் என்பது நான் என்ன செய்கிறேன் என்பதற்கான விடையில்லை. நான் யாராக இருக்கிறேன் என்பதற்கான விடை” (“Teaching is not what I do. It’s who I am,”) என்று அவர் கடந்த ஓகஸ்டில் ட்வீட் செய்திருந்தார்.

அரசியல்

2009 முதல் 2017 வரை தமது கணவர் துணை ஜனாதிபதியாக இருந்தபோது, நாட்டின் இரண்டாவது சீமாட்டி என்ற பட்டம் அவரிடம் இருந்தது.

அந்தக் காலத்தில் அவர் சமுதாய கல்லூரிகளை வளர்ப்பது, ராணுவக் குடும்பங்களுக்காகப் பேசுவது, மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது முதல் சீமாட்டியாக இருந்த மிச்செல் ஒபாமாவுடன் இணைந்து, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்யும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வந்தார்.

ஒரு ராணுவக் குடும்பத்தில் இருக்கும் தமது பேத்தியின் அனுபவத்தின் அடிப்படையில் ‘Don’t Forget, God Bless Our Troops’ என்ற நூலை 2012ல் குழந்தைகளுக்காக வெளியிட்டார் அவர்.

இந்த ஆண்டு, ஜனாதிபதி பதவிக்கான தமது கணவரின் பிராசாரத்தில் உடனிருந்து உதவி செய்து வந்தவர், அதற்காக நிகழ்ச்சிகளையும், நிதி திரட்டும் வேலைகளையும் ஏற்பாடு செய்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்