தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

🕔 October 19, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரை இன்று திங்கள்கிழமை அதிகாலை தெஹிவளையிலுள்ள உள்ள எபினேசர் பிளேஸில் (Ebenezer Place) அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுடீன், திட்டத்தின் இயக்குனர் மொஹமட் யாசீன் சம்சுதீன் மற்றும் திட்ட கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகியோர் 9.5 மில்லியன் ரூபா பொது நிதியை துஷ்பிரயோகம் செய்து, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் திகதிய ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82(1) வது பிரிவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெயர்ந்தவர்களை புத்தளத்தில்இருந்து மன்னார் – சிலவதுரையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக, அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பேருந்துகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் மற்றும் மற்றைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய பிடிவிராந்து பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், சந்தேக நபர்களை பிடிவிராந்து இல்லாமல் கைது செய்ய முடியுமென நீதவான் தெரிவித்திருந்தார். இதன்மூலம், சட்டத்தின் படி மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் டப்புலா டி லிவேரா பொலிஸாரை அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், குற்றப் புலனாய்பு பிரிவின் 06 குழுக்கள் றிசாட் பதியுதீனை தேடிய போதும், அவர் காணாமல் போயிருந்தார். இதனையடுத்து ஒக்டோபர் 14 ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் கோட்டே நீதவான் நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு யணத் தடையை பிறப்பித்தது.

இதற்கிடையில், றிசாட் பதியுதீன், தனது வழக்கறிஞர் மூலம், தன்னைக் கைது செய்யாமலிருக்க உத்தரவிடக் கோரி ரிட் மனுவொன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையிலேயே, றிசாட் பதியுதீனை இன்று காலை கைது செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

தற்போது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் றிசாட் பதியுதீன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்