அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

🕔 September 19, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான றிசாத் ஏ காதர் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பைறூஸ் ஆகியோர் மேற்படி கடிதத்தை, கொழும்பிலுள்ள கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் வைத்துக் கையளித்தனர்.

இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி, உடனடியாக உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு, திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அதிகாரிகளையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் முக்கியத்துவத்தை இதன்போது பணிப்பாளர் நாயகத்திடம் கடிதத்தைக் கையளித்தோர் விவரித்ததோடு, அந்த ஆற்றினை பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையினையும் எடுத்துரைத்தனர்.

பல்லாயிரக் கணக்கான விவசாய நிலத்தின் மேலதிக நீரை, கடலுக்குக் கொண்டு சேர்க்கும் வடிச்சலாகவும், நூற்றுக்கணக்கான நன்நீர் மீனவர்கள் தொழில் செய்யும் இடமாகவும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு உள்ளமை குறித்தும், இதன்போது கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடத்திடம் விவரிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்களாகப் பதவி வகித்த எவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டமை குறித்தும் கடிதத்தைக் கையளித்தோர் சுட்டிக்காட்டியதோடு, அண்மையில் கூட பொதுமக்களின் கையொப்பங்களுடன் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக மூடும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி, கடிதம் கையளிக்கப்பட்டமையினையும் தெரியப்படுத்தினர்.

இதேவேளை கோணாவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்டமையை உறுதிப்படுத்தும் செய்மதிப் படங்களையும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பார்வைக்கு, கடிதத்தைக் கையளித்தோர் இதன்போது கொண்டுவந்தனர்.

விடயங்களை தெளிவாகக் கேட்டறிந்து கொண்ட பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி, இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன்போது, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் காமினி ஹேவாகேயும் பிரசன்னமாகியிருந்தார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்