அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

🕔 September 2, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர்.

பொதுமக்கள் சுமார் 20 பேர் கையொப்பமிட்டுள்ள மேற்படி கடிதத்தில்; அட்டாளைச்சேனை ஆற்றினை சட்டவிரோதமாக மூடி, அபகரிக்கும் செயற்பாடுகளைத் தடுப்பதோடு, ஆற்றின் கரையோரத்தை அண்டி அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் முழு விவரம் வருமாறு;

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆறு, பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். ‘ஓர் ஊரின் ஆரம்பத்தில் தொடங்கி, அதே ஊரின் முடிவில் நிறைவுறும் வகையில் கிடையாக அமைந்த ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை’ என்று அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மறைந்த அறிஞர் சம்சுதீன் மௌலானா கூறியுள்ளார்.

இவ்வாறான சிறப்பினைக் கொண்ட ஆறானது, இப்பிரதேசத்திலுள்ள பல்லாயிரம் ஏக்கர் நெல் வயல்களில் மேலதிகமாகத் தேங்கும் நீரை கடலுடன் கொண்டு சேர்க்கும் வடிச்சலாகவும், நன்நீர் மீன்பிடியை நம்பி வாழும் நூற்றுக்காணக்கான மீனவர்களின் தொழிலிடமாகவும் உள்ளது.

மட்டுமன்றி 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, கடலிலிருந்து பெருக்கெடுத்த நீரை கோணாவத்தை ஆறு தன்னில் உள்வாங்கிக் கொண்டமை காரணமாக, சுனாமியின் பேராபத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேசம் தப்பித்துக் கொண்டமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறான சிறப்புக்களையும் பயன்களையும் கொண்ட கோணாவத்தை ஆற்றின் இரண்டு பக்கக் கரைகளும் மிக நீண்ட காலமாக சட்டவிரோதமாய் மூடப்பட்டு, அபகரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள ஆற்றின் பகுதிகள் வளவுகளாக்கப்பட்டு – வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதோடு, அந்த இடங்களில் கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட, இவ்வாறு சட்டவிரோதமாக கோணாவத்தை ஆற்றினை மூடியுள்ளனர் என்பது இங்கு கவலைக்குரிய விடயமாகும்.

அட்டாளைச்சேனை பெரிய பாலத்துக்கு அருகில் 10 வருடங்களுக்கு முன்னர் கோணாவத்தை ஆற்றின் பெரும் பகுதியொன்று சட்டவிரோதமாக மூடப்பட்டதால், அந்த இடத்தில் ஆற்றின் அகலம் மிகவும் குறுகலாகியுள்ளது. மட்டுமன்றி, அந்த இடத்திலிருந்து தொடர்ச்சியாக ஆற்றை சட்டவிரோதமாக மூடுவதற்கும் அந்த செயற்பாடு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இவ்வாறு கோணாவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்டு வருகின்ற போதும், அதனை உரிய அரச அதிகாரிகள் எவரும் முழுமையாகத் தடுக்காமை காரணமாக, தொடர்ந்தும் கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக பலரும் நிரப்பி வருகின்றனர்.

எனவே, இந்த நாட்டையும் அதன் இயற்கை வளங்களையும் நேசிக்கின்ற இந்த நாட்டின் பிரஜைகள் எனும் வகையில், கோணாவத்தை ஆற்றினை பாதுகாப்பதும், அங்கு சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ள இடங்களை ஆற்றுக்காக மீளப் பெற்றெடுக்கப் பாடுபடுவதும் நமது கடமையாகும்.

எனவே, அட்டாளைச்சேனை ஆற்றினை சட்டவிரோதமாக மூடி, அபகரிக்கும் செயற்பாடுகளைத் தடுப்பதோடு, ஆற்றின் கரையோரத்தை அண்டி அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தக் கடிதத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ள நாங்கள் தயவாய் தங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், நமது நாட்டின் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதியவர்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றினை அழகுபடுத்துவதிலும் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பதனால், இந்த விடயத்தை, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மேலான கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

எனவே, இவ்விவகாரத்தில் ஒரு பிரதேச செயலாளருக்குள்ள உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்படும் போது, ஒரு பிரதேச செயலாளராக உங்கள் கடமைகளை இது விடயத்தில் நீங்கள் நிறைவு செய்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்