அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

🕔 September 2, 2020

ரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தத் திருத்தத்திலுள்ள ஜனநாயகக் கூறுகள் தொடர்பிலும், 19ஐ நீக்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சுமந்திரன் விவரித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து சுமந்திரன் எழுதியுள்ள தகவல்கள் வருமாறு;

19 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள, பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான ஜனநாயகக் கூறுகள்

  • ஜனாதிபதி நீதிமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டியவராவார்.
  • ஜனாதிபதி இரு தவணைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம். இதனால் இரு முறை பதவி வகித்த ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • தகவல் அறியும் உரிமை: தனி நபர் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊழலைத் தடுக்கவுமென முக்கிய தகவல்களை அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை.
  • அரசியல் தலையீடற்ற மேல் நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள்.
  • அரசாங்கத்தில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் எண்ணிக்கைக்கு வரையறை: இதனால் மக்களது வரிப்பணம் வீணடிக்கப்படுவது நீக்கப்பட்டது.

19 ஆம் திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் ஏற்படும் தீங்குகள்

  •  ஜனாதிபதி தன் அதிகாரத்தைப் பிரயோகித்தமைக்கென எவருக்கும் பொறுப்புக் கூற வேண்டிய அவசியமில்லை: இதனால் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு அதிக இடமுண்டு.
  • ஒரே நபர் தொடர்ந்து நாட்டை ஆளும் ஏதேச்சதிகார, ஜனநாய விரோத நிலை உருவாகும்.
  • பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும். இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும்.
  • சுயாதீன ஆணைக் குழுக்களுக்கும், மேல் நீதிமன்றக்களுக்குமான நியமனங்கள் அனைத்தையும் ஜனாதிபதியே மேற்கொள்வார். இதனால் இந்த முக்கியமான நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசுக்கு சார்பாகவும், மக்களுக்கு எதிராகவும் இயங்கும் வாய்ப்பு உருவாகும்.
  • பாரிய அமைச்சரவைகள் தோற்றுவிக்கப்பட்டு மக்களது வரிப்பணம் விரயம் செய்யப்படும் வாய்ப்பு.

Comments