ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

🕔 September 11, 2020

ஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கும், தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பபட்டுள்ள நிலையிலேயே, நேற்று முன்தினம் புதன்கிழமை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.எம். முர்ஷித் என்பவர், ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியத்தை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

ஈஸ்டர் தின தாக்குதலை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் பௌத்த பிக்கு ஞானசாரதேரர் அண்மையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

இதன்போது, தேரர் கூறிய சில விடயங்கள் தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக, சில அமைப்புக்கள் மேற்படி ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதனையடுத்து, ஞானசார தேரரிடம் குறுக்கு கேள்வியெழுப்புவதற்கு, குறித்த அமைப்புக்களுக்கு கடந்த 8ஆம் திகதி, ஆணைக்குழு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனடிப்படையில் ஞானசார தேரரிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சார்பான சட்டத்தரணி குறுக்கு கேள்வியெழுப்புவதற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது ஜம்மியத்துல் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மௌலவி முர்ஷித் என்பவரும் ஆணைக்குழுவுக்குச் சமூகமளித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே, ஆணைக்குழுவில் இடம்பெற்ற விடயங்களை மௌலவி முர்ஷித் என்பவர் தனது கைப்பேசியில் ஒலிப்பதிவு செய்ததை அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவரை விசாரணை செய்த பொலிஸார், ஒலிப்பதிவு செய்த கைத்தொலைபேசியை கைப்பற்றியதோடு, அவரிடம் வாக்குமூலம் ஒன்றினையும் பதிவு செய்தனர்.

முர்ஷித் எனும் மேற்படி நபர், தன்னுடைய கைத்தொலைபேசியை தமது சட்டத்தரணி ஒருவரிடம் கொடுத்து, சாட்சியமளிக்கப்படும் இடத்துக்குக் கொண்டுவரச் செய்துள்ளார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, சாட்சியங்களை ஒலிப்பதிவு செய்த முர்ஷித் என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜம்மியத்துல் உலமா வருத்தம் தெரிவிப்பு

இதனையடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக தமது அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் – ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிவுறும் வரையில், ஜம்மியாவில் தான் வகித்த உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக மௌலவி முர்ஷித் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், அவரின் பதவி விலகலை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் தற்போது சுகயீனமுற்றுள்ளமையினால், பதில் பொதுச் செயலாளராகவும் மௌலவி முர்ஷித் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்