அஸாத் சாலிக்கு ஆப்பு வைத்த சஜித்: ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்

🕔 August 14, 2020

– அஸீஸ் நிஸாருத்தீன் –

ஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அஸாத் சாலியை நியமிக்காத விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சஜித் பிரேமதாஸ தனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று அஸாத் சாலி கூறியுள்ளார். சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்தை முன் வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தன்னை கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து செல்வது அவருடைய கடமையென்றும், தான் ரணசிங்க பிரேமதாஸவின் புத்திரர் என்றும் தான் கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுபவன் என்றும் சஜித் பிரேமதாஸ தன்னிடம் கூறியதாக அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பெயர்களில் அஸாத் சாலியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

இதன் மூலம் இரண்டாவது முறையாகவும் அஸாத்சாலி ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அஸாத் சாலிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை பார்க்கும் போது, சஜித்தின் இந்த நகர்வுகளிலிருந்து நாம் புரிந்த கொள்ள வேண்டிய ‘நுண் அரசியல்’ பாடம் அதிகமிருக்கிறது என்பதே எனது கருத்து.

கடந்த ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இதே போன்ற வாக்குறுதியை அஸாத்சாலிக்கு வழங்கிவிட்டு ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது இந்த சமூகத்துக்கு படிப்பினையாகும்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறிப்பாக முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளின் மூலம் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரதேசங்களில் வெற்றியடைந்த சஜித்தின் கட்சி, இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கு மட்டுமே சிறுபான்மை இனம் சார்பாக தேசியப்பட்டியல் அங்கத்துவத்தை வழங்கியுள்ளது.

சஜித்தின் தேசியப்பட்டியலில் இதர ஆறு இடங்களும் பெரும்பான்மை இனத்தவருக்கே வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த தேர்தலில் சிங்கள பெரும்பான்மை மக்கள் சஜித் பிரேமதாஸவை நிராகரித்து தோல்வியின் விளிம்புக்கு தள்ளி வைத்துள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் இல்லாவிட்டால் ரணிலுக்கு ஏற்பட்ட நிர்க்கதியான படுமோசமான நிலையே சஜித்திற்கும் ஏற்பட்டு இருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியோடு இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் தயவும், மத்திய கொழும்பு மக்களும் இல்லாவிட்டால், சஜித் படுதோல்வியையும் பின்னடைவையும் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் கூறியது போல் காட்டிலுள்ள புலியினங்களைப் பாதுகாக்க வனவாசத்தை அடைந்திருப்பார்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பலதரப்பட்ட பிரச்சினைகளின் போதும், இன்னல்களின் போதும் சஜித் பிரேமதாஸ வாய் மூடி மௌனியாகவே இருந்தார் என்பது கசப்பான உண்மையாகும். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஒரு சில இக்கட்டான சந்தர்ப்பங்களில் சிங்கள மக்களை திருப்தி படுத்தும் வகையில் நடந்தும் கொண்டார்.

இருந்த போதும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் சஜித்துக்கு தமது வாக்குகளை தாராளமாக வாரி வழங்கியுள்ளனர்.

இதே போன்று முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளில் எப்போதும் தலையிடாத, கருத்து சொல்லாத இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், சிங்கள சமூகத்தின் மத்தியில் சிறந்த அரசியல்வாதியாக கணிக்கப்படுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்