கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

🕔 August 14, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த 05ஆம் திகதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில்,13ஆம் திகதி இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

அவரது உடல்நிலையை மருத்துவர்களின் குழு ஒன்று கண்காணித்துவருவதாக அவர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

கோவிட் – 19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

ஆந்திர மாநிலம் – நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.

நன்றி: பிபிசி தமிழ்

Comments