மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா?

🕔 July 13, 2020

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்தும், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையான தொனியில் தெரிவித்து வந்த நிலையிலேயே, அந்தக் கட்சியுடன் சேகு இணையவுள்ளார்.

இதற்கிணங்க சேகு இஸ்ஸதீனின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் நாளை செவ்வாய்கிழமை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் சேகு இஸ்ஸதீன் மேடையேறி, மு.கா.வுடனான தனது இணைவை அறிவிக்கவுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

மு.கா. தலைவர் ஒரு வியாபாரி என்றும், அவர் தனது சொந்த நலனுக்காக அரசியலைப் பயன்படுத்துகிறார் என்றும், ஹக்கீம் குறித்து சேகு இஸ்ஸதீன் விமர்சித்து வந்த நிலையிலேயே, மு.காங்கிரஸுடன் அவர் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர் தேர்தல் காலமொன்றின்போது முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொண்டு, அந்தக் கட்சிக்காக பிரசாரம் செய்த சேகு இஸ்ஸதீன்; மிகக் குறுகிய காலத்திலேயே அந்தக் கட்சியை விட்டும் பிரிந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இந்த செய்தி தொடர்பில் சேகு இஸ்ஸதீனுடன் பேசுவதற்காக அவரின் தொலைபேசிக்கு ‘புதிது’ செய்தித்தளம் அழைப்பு மேற்கொண்ட போது, வேறு ஒருவரே பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்