அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

🕔 July 7, 2020

– அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை – ஆலிம்சேனையில் கொட்டப்படும் திண்மக் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் திட்டம், எதிர்வரும் 13ஆம் திகதி ஆளுநரால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ஆளுநரின் வருகையை முன்னிட்டு சில வேலைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறி, சுமார் 15 லட்சம் ரூபாவை செலவிடுவதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டனர்.

இவ்விடயத்தினை ஆளுநரின் கவனத்துக்கு முக்கிய தரப்பொன்று கொண்டு சென்றது.

இதனையடுத்து, குறித்த செலவுடன் சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும், இது தொடர்பில் மாகாண சபையிலுள்ள சில அதிகாரிகளிடமும், அவர்களின் ஊடாக பிரதேச சபையிலுள்ள அதிகாரிகளிடமும் ஆளுநர் தரப்பிலிருந்து விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவருகிறது.

ஆளுநரின் வருகையினைக் காட்டி செலவிடத் தீர்மானித்திருந்த 15 லட்சம் ரூபா பணத்தில், பெருந்தொகை கொமிஷனாக சுருட்டப்படவிருந்ததாக – இது தொடர்பில் விவரம் அறிந்தோர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்