நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

🕔 June 2, 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதிபதி குழாமின் இணக்கத்துடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த தீர்ப்பை அறிவித்தார்.

இந்த மனுக்கள் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஐவர் அடங்கிய நீதிபதி குழாமின் பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கத்துடன் நீராகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக பிரதம நீதியரசர் தெரிவித்தார்.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, மாற்றுக் கொள்கைக்கான நிலையம், ஊடகவியாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட 07 பிரதிவாதிகளால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த மனுக்களுக்கு எதிராக வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே தேரர், வணக்கத்துக்குரிய அதபத்துகந்தே ஆனந்த தேரர் கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த உள்ளிட்ட 15 தரப்பினரால் இடைநிலை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்றில் 10 நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வெளியானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்