12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை

🕔 June 1, 2020

லங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, அவர் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பலரும் பகிர்ந்தனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எழுதியிருந்த பதிவொன்று, ஆறுமுகனுக்குள் சிறுபராயத்திலேயே இருந்த கருணை மனதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஆறுமுகன் குறித்து பஷீர் சேகுதாவூத் எழுதிய அந்தப் பதிவில் ஒரு பகுதியை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

பெரியவர்  சௌமியமூர்தி தொண்டமான் ஐயாவிடம் அரச அனுமதிப் பத்திரம் உள்ள ‘சொட் கண்’ (shot gun)  துப்பாக்கி இருந்தது. 1976 ஆம் ஆண்டு ஒரு நாள் 12 வயது ஆறுமுகன் – அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து; “ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க எனக்கு ஆசை சுட்டுக் காட்டுங்கள்” என்று கேட்டார்.

கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து SG  தோட்டாவை புகுத்தி, மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார். இதனைப் பார்த்த சிறுவன் ஆறுமுகன்; “நானும் சுடணும் நானும் சுடணும்” என்று அடம்பிடித்து துள்ளினான்.

பெரியவரின் கண்ணுக்கு தெரியாதபடிக்கு – வேறு ஒரு இடத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்று துப்பாக்கியில் அதிர்வு குறைந்த வகையில் ‘பொறியும்’ நாலாம் நம்பர் தோட்டா ஒன்றை நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தை காட்டி இலக்கு வைத்து சுடுமாறு கூறி – துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார்.

சரியாக காகத்தை இலக்கு வைத்த ‘தம்பி’ – துப்பாக்கி குழலை காகம் இருந்த இடத்துக்கு அப்பால் வலப்புறமாக ஓர் அடி அளவு நகர்த்தி ‘றிகறை’ அழுத்தினார். ‘டுமீல்’ –  காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது.

ஏன் தம்பி நீங்கள் காகத்தை சுடாமல் தப்ப விட்டீங்க? என்று கேட்ட ஐயாவிடம் “காகம் பாவம்,  இப்ப அது  – அதுட கூட்டுக்கு பிள்ளைகள பார்க்க போயிருக்குமில்ல…” என்று சொன்னார் தம்பி ஆறுமுகன்.

இப்படிப்பட்ட இனிய ‘உயிரபிமானி’யாக ஆறுமுகன் இருந்தார்.

Comments