கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்

🕔 May 8, 2020

கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தைக் கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக நிற்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

செவ்வாய்கிழமையற்று கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த பாத்திமா றினோஸா எனும் முஸ்லிம் பெண் ஒருவர், அங்கொட தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனாவினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, இறந்தவரின் உடலுக்கு தொழுகை நடத்துவதற்கான சந்தர்ப்பம் அவரின் கணவருக்கு மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் மகன் உள்ளிட்ட இருவருக்கு மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், கொரோனாவினால் இறந்தாகக் கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட றினோஸா எனும் பெண் – கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று, இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞான கழகத்தின் தலைவர் ரவி குமுதேஷ், நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

எழுந்துள்ள விசனங்கள்

இதனால், கொரோனா தொற்றற்ற முஸ்லிம் ஒருவரை, கொரோனாவினால் இறந்ததாகக் கூறி – தகனம் செய்த விவகாரம் கடும் விசனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகின்றது.

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்கின்றமை குறித்து, ஏற்கனவே முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், கொரோனாவினால் இறக்காத ஒருவரின் உடலை தகனம் செய்தமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்