முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும்

🕔 May 6, 2020

– சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் –

ரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர் – முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள்” என, முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூர் தெரிவித்துள்ளார்.

“தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து நமது நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டது – நாமே” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்போதைய ஆட்சியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்தும், அதற்கான பின்னணி தொடர்பாகவும் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அஸ்ஸுஹூர் எழுதியுள்ள பதிவொன்றிலேயே மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவின் முழு வடிவம் வருமாறு;

தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து நமது நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டது நாமே. யாரையும் குற்றம் சாட்டத்தேவையில்லை.

தொடர்ச்சியாக மகிந்த தரப்புக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள ஓட்டுக்களைப் பெற அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் இனிமேலும் செய்வார்கள்.

இலங்கை நாடு, மகிந்த தரப்புக்கோ இனவாதிகளான சில சிங்களவர்களுக்கோ கிரயம் செய்து கொடுக்கப்பட்ட சொத்து அல்ல. இத்தாய்நாட்டை நாமும்,நமது தந்தையரும், நமது பாட்டன்மாரும், முப்பாட்டன்மாரும் சேர்ந்துதான் செதுக்கினோம்.

இதன் துயரங்கள், வரலாறு, பெருமைகள் அனைத்திலும் பிரஜைகள் அனைவருக்கும் பங்கு உள்ளது.

சிறுபான்மை மக்கள் அனைவரும் இதில் உறுதியாக இருத்தல் வேண்டும். அரசாங்கத்திடம் பஞ்சம் பிழைக்க வந்தது போல் கையேந்தி நிற்பதற்கு அவசியம் இல்லை.

இந்த மகிந்த கூட்டத்தை நாம் இதற்கு முன்னரும் வீட்டிற்கு அனுப்பியுள்ளோம். அதர்ம வழியில் இவர்களது ஆட்டம் தொடருமானால் மீண்டும் இவர்களை வீட்டுக்கு அனுப்ப இறைவன் உதவிசெய்வான்.

அரசியல்வாதிகளை விடுங்கள். நமது படித்த ஆளுமைகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள். வக்கீல்கள் ஏன் வாளாவிருக்கிறார்கள். நாட்டிலுள்ள முடியுமானவர்கள் வக்கீல்கள் ஒவ்வொரு அநீதியின்போதும் நீதிமன்றத்தை நாடுங்கள். ஒன்றுமே செய்யாமலிருப்பதற்கு – ஏதாவது செய்வது மேல் அல்லவா?

ஆனால் இனவாதிகளுடன் இருந்தால்தான் நாம் பிழைக்கலாம் என்று ஒட்டுண்ணி அரசியல் செய்யும் கையறு நிலைக்கு நாம் போக வேண்டியதில்லை. அவர்களுடன் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அங்கு மரியாதையில்லை.

அவர்களுடன் என்றுமே அனுசரித்துப் போகாத தமிழர்கள் கௌரவமாக வாழவில்லையா? சம்பந்தன் அவர்களையும் கூடச் சென்றவர்களையும் அண்மையில் அவர்கள் கௌரவமாக நடத்தவில்லையா?

என்ன? அரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள்.

மகிந்தவுடன் இருக்கும் அல்லது எதிரணியில் இருக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அங்கு கை நனைத்தவர்களே!

ஆக, இந்தளவுக்காவது நடத்துகிறார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்