“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

🕔 April 21, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், அதனை – தான் கண்டும் காணாமல் இருப்பதாவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக் கடை விற்பனையாளர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கும் இடையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரும் பங்கேற்றிருந்தார்.

இந்தச் சந்திப்பும் அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலும், ‘பேஸ்புக்’ பக்கமொன்றில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்களுடனான மேற்படி சந்திப்பின்போது, அங்கிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர்; “மடுவத்தில் 10 தொடக்கம் 12 மாடுகள்தான் அறுக்க முடியும். ஆனால் 40 தொடக்கம் 50 மாடுகள் வரை அறுக்கப்படுகின்றன.

சுகாதாரம் என்பது அங்கு அறவே இல்லை. அதனால் மடுவத்துக்கு நான் வருவதில்லை. அங்கு நடப்பவற்றை ஒரு பொதுச் சுகாதார பரிசோதகர் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இரவில் அனைத்து மாடுகளையும் பார்த்து விட்டு – அவற்றை அறுக்கச் சொல்லி விட்டு வந்து விடுவேன். காலையில் அங்கு நான் வருவதில்லை.

அங்கு வந்து நிற்பதை விடவும், வீட்டில் உறங்குவது நல்லது” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர்; “மடுவத்தில் நீர் வசதியில்லை. வாளிகள் கூட இல்லை. பாதுகாவலர் கூட அங்கில்லை. அப்படியென்றால் நாம் என்ன செய்வது” எனக் கேள்வி எழுப்பினார்.

‘பேஸ்புக்’ இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த விடயங்கள் குறித்து, ‘புதிது’ செய்தித்தளத்தின் கவனத்துக்கு பொதுமக்கள் பலர் கொண்டு வந்ததை அடுத்து, இதனை செய்தியாக நாம் வெளியிட வேண்டிய தேவை எழுந்தது.

அதேவேளை, மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்ளுடன், பிரதேச சபையின் தவிசாளர் உத்தியோகபூர்வமாக நடத்திய மேற்படி சந்திப்பை, ‘பேஸ்புக்’ இல் நேரடியாக ஒளிபரப்புவதற்கான தேவை ஏன் எழுந்தது என்பது, இங்கு முக்கியமான கேள்வியாகும்.

முட்டாளுக்கு மூன்று இடத்தில் நாற்றம் என்பது போல் இருக்கிறது, அட்டாளைச்சேனை பிரதேச சபையினரின் இந்த நடவடிக்கை.

எது எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் மேற்படி சுகாதார வைத்திய பரிசோதகர் கூறிய விடயம் தொடர்பில், பொறுப்பானவர்கள் அனைவரும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டிமை அவசியமாகும்.

மக்களின் சுகாதார விடயத்தில், அதுவும் உணவுடன் தொடர்புபட்ட சுகாதாரத்தில் யாரும் அசட்டையாக இருந்து விடவும் முடியாது, அதனை அனுமதிக்கவும் கூடாது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்