ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார்

🕔 April 14, 2020

க்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அதன் நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து – ஒரு நாளுக்கான சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அறவிடும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ள போதிலும், அதனை உத்தியோக ரீதியாக கையாளவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

கொரோனா நிவாரண நிதிக்காக ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து – ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதற்காக, ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் சம்மதக் கடிதங்களைப் பெறுமாறு, பாடசாலைகளின் அதிபர்களுக்கு வாய்வழி மூலமாகவும், வட்ஸ்ஸப் வழியாகவும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

ஆயினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் தமக்கு கடிதங்களை வழங்குமாறு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினரிடம் பாடசாலைகளின் அதிபர்கள் கோரிக்கை விடுத்த போதும், அவ்வாறு கடிதங்களை வழங்குவதற்கு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் பின்னடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினர் உத்தியோகபூர்வமான வகையில் எழுத்து மூலம் தம்மிடம் கோரிக்கை விடுக்காமையினால், இவ்விடயம் குறித்து தமது பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களிடம் பேசுவதில்லை என, பல அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக நிருவாகத்தின் கீழ், சுமார் 2000 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இவர்கள் ஒவ்வொருவரின் ஒரு நாளுக்குரிய சம்பளம் 1500 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரையில் உள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களுக்கும், இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகமும் எழுத்து மூலம் அறிவிக்காமல் வாய்வழியாகவே அறிவித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்