கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி

🕔 April 9, 2020

– அஹமட் –

க்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ (சக்தி ரி.வி) செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி செய்தியில் இந்தத் தகவலை ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவித்தது.

நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் மரண வீடு ஒன்றுக்கு, மேற்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் சென்றிருந்தாக, தகவலொன்று பரவியிருந்த நிலையில், சமூக ஊடகங்களில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிலர் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பரை, சற்று முன்னர் ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு, மேற்படி விடயம் குறித்து கேட்டது.

அதற்கு பதிலளித்த அவர்; “கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக தகவல் ஒன்று உள்ளது. அது குறித்து விசாரித்து வருகின்றோம். ஆனால், அந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் குடும்பத்தவர்கள் 08 பேர், கொரோனா தொற்றுள்ளதா என்பதை அறியும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் டொக்டர் பறூஸா கூறினார்.

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டை அண்டியுள்ள 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 நபர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான மேற்படி நபர், நேற்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டார்.

தொடர்பான செய்தி: அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்