கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு

🕔 March 30, 2020

– பஷீர் சேகுதாவூத் –

01

புதிய கொரோனா வைரஸான கோவிட் – 19 இனுடைய தாக்கத்தின் விளைவுகளை அரசியல் சமூக பொருளாதார அடிப்படையில் பார்க்கவேண்டியுள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியான விளைவுகளை ஊடகங்கள் மூலம் ஓரளவு அறியக்கிடைக்கிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தை அறிகின்ற அல்லது மாற்று பொருளாதார வல்லுநர்களோடு கலந்துரையாடுகின்ற போது கிடைக்கிற முடிவுகளை ஆச்சரியத்தோடு பகிர்கிறேன்.

எதிர்வரும் வாரம் வெளியாகவுள்ள ‘தி இகொனமிஸ்ட்’ (The Economist) என்ற வாராந்த சஞ்சிகையின் அட்டையில் ‘உலகப் பொருளாதாரத்துக்கான சரியான மருந்து’ (The right medicine for the world economy) என்று தலைப்பிடப்பட்டு, கீழே கொரோனா வைரசின் உரு பெருக்கப்பட்ட படம் போடப்பட்டுள்ளது.

உலக முதலாளித்துவ பொருளாதாரம் – இயற்கை பேரழிவுகளின் அல்லது மனிதர்களால் ஏற்படும் யுத்தம் போன்ற பேரழிவுகளின் பின்னரான காலத்தில் பாரிய வளர்ச்சியை சுட்டி நின்ற வரலாற்றை பார்க்கிறோம். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் பின்னர் பொதுவுடமைப் பொருளாதாரம் கீழிறங்கி முதலாளித்துவப் பொருளாதாரம் உச்சம் தொட்டதை நாமும் நமக்கு முந்திய பரம்பரையும் கண்டோம்.

கொரோனா பேரனர்த்தம் இயற்கை இடரா? அல்லது மனிதர்கள் ஏவி விட்ட அழிவா? என்று உலகம் விவாதித்துக்கொண்டிருக்கிறது. எதுவாகினும் இது ஒரு ‘உயிரியல் உலகப் போர்’ அல்ல என்று விவாதிக்க தக்க காரணங்கள் உள்ளன.

02

தற்காலத்தில் நடைமுறையில் உள்ள நவீன முதலாளித்துவ பொருளாதாரம்; கொரோனா அனர்த்தம் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே உலகு தழுவிய சரிவைச் சந்திக்கத் துவங்கிவிட்டது. முன்னர் நிகழ்ந்த பேரழிவுகளின் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியை கண்டமை போல, கொரோனாவின் அழிவுகளைத் தாண்டி முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு கண்ணுக்கு புலப்படாத வலையொன்று பின்னப்பட்டுவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிற கட்டாயத்தை இந்த பதட்டமான சூழல் ஏற்படுத்தியிருக்கிறது.

உலக மானுடம் – நிச்சயம் வைரஸை வெல்லும். பல வகை நோய்களை வெற்றி கொண்டுதான் இவ்வுலகம் இன்னும் வாழ்கிறது. இந்தப் புதிய வைரஸ் உலக ரீதியாக ஏற்படுத்தியுள்ள மரண வீதத்துக்கு சமனாக அல்லது அதிகமான நாளாந்த மரணங்களை; தற்கொலை மற்றும் விபத்துகள் ஏற்படுத்துகின்றன என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். கொரோனா வீரியமிழக்கும், நீண்டகாலம் வாழாது.

உலக பொருளாதாரத்தின் சீரான செயல் விசைக்கு வழி ஏற்படுத்துவதற்கு இரண்டு அடிப்படை அம்சங்கள் தேவை. அவை; ஒன்று: கிராக்கி (Demand), மற்றையது: வழங்குதல் ( Supply ) ஆகியனவாகும். வாங்குதலும் வாங்கத் தேவையான பணமும் கிராக்கியையும், வழங்குதலையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஏற்கனவே பல்தேசியக் கம்பனிகள் மக்களை தேவைக்கதிகமான நுர்வுக்குப் பழக்கப்படுத்தியிருக்கிறது. இதனால் உழைப்பில் கிடைக்கும் ஊதியம்; உலகில் மிகப் பெரும்பான்மையினராக வாழும் சாமானியருக்கு போதாமலே உள்ளது. பல காரணிகளால் உலகப் பொருளாதாரம் இடிந்து வீழ்ந்துவிட்டது. பொருளாதாரம் வீழ்ந்ததால் வழங்குதலான (Supply) பணப் புழக்கமும் இடிந்தழிந்து விட்டது. இன்றைய கொரோனா வைரஸ் பரவலால் நடைமுறைக்கு வந்துள்ள தனிமைப்படுதலும், உலகு தழுவிய ஊரடங்கும், பூட்டுகையும் கிராக்கியை அதாவது மக்களின் தேவைக்கதிகமான கொள்வனவை நிறுத்தியுள்ளதோடு அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவையும் மட்டுப்படுத்தியுள்ளது.

03

இன்னும் சில மாதங்களுக்கு சமாளித்துவிட்டால் உலகப் பொருளாதாரம் தலை தூக்க ஆரம்பித்துவிடும் என்று நம்பப்படுகிறது. பலவீனமான நிலையை அடைந்துள்ள யூரோ போன்ற கரன்சிகள் நிமிர்துவிடும்.

அழிவுப் பொருளாதாரம் அலைபோல மேலெழும்பக்கூடியது. இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட சுனாமி இயற்கை அழிவின் பின்னர், இந்நாடுகளின் பொருளாதாரம் திடம் பெற்றதை உதாரணமாகக் காட்டலாம். இது போலவே உலக மகா யுத்த அழிவுகளின் பின்பு ஐரோப்பிய பொருளாதாரம் பாரிய வளர்ச்சியைக் கண்டது.

கொரோனா தாக்கம் சீனா, அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் வேகமாகவும் அதிகமாகவும் பரவியதை அவதானிக்க வேண்டும். இந்நாடுகளின் முக்கிய தலைவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் இவ்வைரஸ் தாக்கியதான செய்திகளை கேட்டோம். இவ்வைரஸ் தொற்று யாரிடமிருந்து தங்களுக்கு தொற்றியது என்று அவர்கள் சொல்லவே இல்லை.

இனி, நாடுகளின் மத்திய வங்கிகள் பணத்தை அச்சிட்டு வெளியிடும். ஐக்கிய அமெரிக்கா 02 ட்ரில்லியன் டொலர்களை – கொரோனாவை கையாளவும், நிவாரணத்துக்காகவும் ஒதுக்கியுள்ளது. இப்பெருந் தொகைப் பணம் புதிதாக அச்சிடப்படப் போவது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவானது. இதனை அனைத்து நாடுகளும் பின்பற்றப் போகின்றன. இதனால் உலகப் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். பணம் அச்சடிக்கப்படுவதால் சப்ளை நிமிர்ந்துவிடும். இதனையே அழிவுக்குப் பின்னான வளர்ச்சி என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

மேலும், 55 தொடக்கம் 60 டொலர்களாக இருந்த கச்சாய் எண்ணெயின் விலை, கொரோனா குழப்பத்தால் 23 தொடக்கம் 25 டொலர்களாக குறைவடைந்துள்ளது. ஆயினும் இன்றைய எரிபொருட்களின் விலையை எந்த அரசாங்கமும் குறைக்க மாட்டாது. இதனால் கிடைக்கும் லாபத்தை வைத்து அரசாங்கங்கள் நன்மை பெறும்.

அண்மைய எதிர்காலத்தில் அரசாங்கங்கள், தனியார் பெரு நிறுவனங்கள் எல்லாம் தலைகளைத் தூக்கி நிமிர்ந்துவிடும். வரவு செலவுத் திட்டங்களை தயாரிக்க முடியாமல் அல்லாடிய, கடன் சுமையால் அழுத்தப்பட்ட, வருமான வரி குறைவால் வழுக்கி வீழ்ந்த, துண்டு விழும் தொகையால் துவண்டு நின்ற அரசாங்கங்களும் விடுதலை அடைந்துவிடும்.

தனியார் கம்பனிகள் அரசிடம் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்றும்; நட்ட ஈடுகளை நிவாரணமாகப் பெற்றும் மீள் எழுச்சி பெற்றுவிடும். உத்தியோகத்தரும், ஊழியரும் சம்பள உயர்வைப் பெறுவர். சுய தொழில் செய்வோரும் வட்டியில்லா கடன், நிவாரணம் மூலம் வாழ்வை புதுப்பிப்பர். ஆயினும் சம்பளம் பெறுவோரும், சுய தொழிலாளிகளும் மீண்டும் தேவைக்திகமான நுகர்வு (Over consumption) கவர்ச்சியில் வீழவே செய்வர். இதனால் போதாமை இவர்களைத் தொடர்ந்து துரத்தவே செய்யும். ஆனாலும் இன்னும் பல தசாப்தங்களுக்கு கிராக்கி கிராக்கியாகத்தான் இருக்கும். தேவை ஏற்பட்டால் இன்னுமொரு அழிவு வராமலா போகும்?

04

சீனாவில் கொரோனா முன்முதலில் தொற்றிக்கொண்டாலும், அதிக பாதிப்பு ஏற்பட்டாலும் அந்நாடு தன்னை ஒரு திறன்மிக்க நாடு என்று நிரூபித்துவிட்டது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வைத்தியம் செய்யவென ஆயிரம் படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையை 06 நாட்களுக்குள் கட்டி முடித்தமை, விரைவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியமை, பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுக்கு வைத்தியர்களை அனுப்பியமை, நிதி ஒதுக்கீடு செய்தமை போன்ற செயற்பாடுகளால் – சீனா முதன்மை பெருமையை ஈட்டிக்கொண்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளும் தமது தலைமைப் பாத்திரத்தை நிரூபிக்கும். அமெரிக்க, இந்திய, ஐக்கிய ராச்சிய தலைவர்கள் தமக்கிருந்த அரசியல் நெருக்கடிகளில் இருந்து கொரோனாவால் தப்பிப் பிழைத்தும் விட்டார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை சாக்காக வைத்து அநேக மதங்களை தவிடுபொடியாக்க அல்லது சாய்க்க தொடங்கி விட்டார்கள். இது ஆரம்பம் மட்டும்தான். ஆலயங்கள், கோவில்கள், பன்சலகள் மற்றும் மஸ்ஜித்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

‘பெரஸ்ட்ரோய்கா’ (1987 இல் சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி மிகையில் கொர்பச்சேவ் முன்வைத்த மறுசீரமைப்புக் கொள்கை) காலத்துக்கு பிந்தி தோற்றம் பெற்ற கலாச்சார மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் முனைப்பாகவும் இது இருக்கக்கூடும்.

இந்த நிலமையை சமாளிப்பற்காக மத நிறுவனங்கள் – ஆசியாவில் உள்ள எல்லா மத தலங்களிலும் ஒலிபெருக்கிகளை மட்டும் தத்தமது மத அனுஷ்டானங்களை, அழைப்புகளை காற்றோடு கலந்து விட்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் எல்லா மொழிகளிலும், எல்லா மதங்களினதும் கொரோனாவைக் கொல்லும் ‘வாக்கிய’ மருந்துகளை தெளித்து விட்டுக் கொண்டிருக்கின்றன. மத அமைப்புக்கள் பல வசதி படைத்தோரிடம் உதவிகளை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதன் ஊடாக தமது அதிகாரத்தை தக்க வைக்க பாடுபடுகின்றன.

பெரும்பாலான மக்கள் ஒன்றும் புரியாமல் இந்தப் புதிய சூழல் எனும் சூறாவளிக்குள் அகப்பட்ட சருகுகளாக பறந்து திரிகிறார்கள். சூறாவளி ஓய்ந்தால் யார் யார் எந்தெந்த மூலையில் வீசப்படுவோமோ?

இந்த உலகத்தில் நாம் வாழவேண்டுமாக இருந்தால் அதி புத்திசாலியாக இருக்கவேண்டும் அல்லது வடிகட்டிய முட்டாளாக இருக்கவேண்டும் போல் தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரவல் இயற்கையாக வந்ததென்றால் அது எதிர்காலத்தில் இறைவன் வழங்கிய வாய்ப்பாகவும் (God given opportunity), செயற்கையாக உருவாக்கி பரவச் செய்யப்பட்டிருந்தால் நட்டப்படக் காத்திருந்த அரசுகள் மற்றும் பல்தேசியக் கம்பனிகளின் சதியின் வெற்றியாகவும் பேசப்படும்.

ஏதோ இலங்கையர்களாகிய நாமும் 10,000 ரூபாய் ஒற்றை ‘கரன்சி’ நோட்டை பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

(பஷீர் சேகுதாவூத் – பேஸ்புக் பக்கத்திலிருந்து…)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்