கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஹரீஸ்

🕔 March 20, 2020

– எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் –

ரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனையிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமைநடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“தேர்தல் காலம் என்பதால் சமூக வலைத்தளங்களில் பொதுவாக அரசியல் சார் விடயங்களே எழுதப்படுகின்றன. எனவே நான் ஓர் அரசியல் கட்சி பிரதிநிதியாக இருந்தாலும், சகல கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏனைய சமூக வலைத்தளங்களை பாவிப்போரிடம் வேண்டிக் கொள்வது, தயவுசெய்து நாங்கள் எங்களது அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கோரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்

இத்தொற்று வைரஸை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து விட்டு, பொது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். நோய்த் தொற்று உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் வரை, வறுமையில் வாழும் மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், அங்குள்ள நோய்த் தொற்றுக்கு உள்ளான மக்களுக்கு அன்றாட உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இத்தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை உரிய முறையில் மக்கள் பின்பற்ற வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களும், மத்திய சுகாதார அமைச்சும், சில தொண்டு நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்விடயத்தில் நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க எப்போதும் தாயார் நிலையில் உள்ளேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்