தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

🕔 March 14, 2020

– மரைக்கார் –

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனாலும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தேசியப் பட்டியல் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்துடன் நஸீர் உள்ள போதும், அவருக்கான வேட்பாளர் ஆசனத்தை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

இதை முன்கூட்டியே அறிந்து கொண்டமையினால்தான், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நஸீர் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்கும் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை முக்கியமானதாகும். அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸுக்கான வாக்குகளும் அதிகம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வரில், பைஸால் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரிலும், எம்.ஐ.எம். மன்சூரின் சொநந்த ஊரான சம்மாந்துறையிலும் இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இதைச் சுட்டிக்காட்டி, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீரின் ஆதரவாளர்கள், இம்முறை தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றத் தேர்தலில் நஸீருக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நஸீருக்கு ஹக்கீம் இம்முறை தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்காமல் ‘வெட்டுவார்’ என்கிற அச்சமும், நஸீரின் ஆதரவாளர்களுக்கு உள்ளது. அப்படி நடந்தால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, நிச்சயமாக நஸீர் யோசிக்காமல் இருக்க மாட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளராட்சி சபைத் தேர்தல் காலத்தில், மு.கா. தலைவருக்கு மிகக் கடுமையான நெருக்கடிக்கடியை ஏற்படுத்தியே, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நஸீர் பெற்றெடுத்தார். இது ஹக்கீமுக்கு கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியிருந்தபோதும் அதனை அவர் அப்போது வெளிக்காட்டவில்லை.

ஆனால், அதற்கான கணக்குகளையெல்லாம் நஸீருக்கு எதிராக இப்போது மு.கா. தலைவர் ஹக்கீம் தீர்க்கப் போகிறாரா என்கிற கேள்வியும் உள்ளது.

அட்டாளைச்சேனையில் முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான சண்டித்தன அரசியலைச் செய்து கொண்டிருந்த போது, அதனை அதே வழியில் சமாளிப்பதற்கு நஸீர் தேவைப்பட்டார்.

ஆனால், இப்போது முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து விட்டதால், மு.கா. தலைவருக்கு நஸீரின் தேவை இல்லாமல் போய்விட்டதா என்கிற கேள்வியும் உள்ளது.

எது எவ்வாறாயினும், நஸீருக்கு இம்முறை தேர்தலில் வேட்பாளர் ஆசனம் கிடைக்காமல் போனால், அடுத்து அவர் என்ன செய்வார் என்பதுதான் இப்போதைக்கு – உள்ளுர் அரசியலில் உள்ள பெருத்த கேள்வியாகும்.

தொடர்பான செய்திகள்:

01) மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்

02) பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்