மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்

🕔 October 17, 2019
உதுமாலெப்பை, நஸீர் கைகுலுக்கிக் கொள்கின்றனர்

– மரைக்கார் –

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார். அவருடன் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய சிலரும் மு.காங்கிரஸில் சேர்ந்துள்ளனர்.

“இனி, அடுத்து என்ன” என்பதுதான் அநேகரின் கேள்வியாக உள்ளது.

அநேகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரண்டு உள்ளுர் தலைவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதுதான் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமின் வழக்கமாகும்.

உதாரணமாக அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். கல்முனையில் ஹரீஸ் – ஜவாத், சாய்ந்தமருதில் ஜெமீல் – சிராஸ், நிந்தவூரில் தாஹிர் – பைஸால் காசிம், அக்கரைப்பற்றில் ஹனீபா மதனி – தவம் என்று இருந்தனர்.

இப்படி உள்ளுரில் இருக்கும் இரட்டைத் தலைவர்கள் தங்களுக்குள் அதிகாரத்துக்காகவும், பதவிகளுக்காகவும் எப்போதும் அடிபட்டுக் கொண்டிருப்பார்கள். கட்சித் தலைவரிடம் இவர்களில் ஒருவர் பதவியொன்றைக் கேட்டுச் சென்றால், மற்றையவர் தனக்கும் அதே பதவி வேண்டும் என்பார். அப்போது; “இருவரும் பேசிக் கதைத்து ஒரு முடிவுடன் வாருங்கள்” என்று கூறி, அவர்களை தலைவர் அனுப்பி விடுவார். இவர்களுக்குள் எந்த சமரசமும் வராது. அதை வைத்தே அந்த விவகாரத்திலிருந்து தலைவர் தனது தலையைக் கழற்றிக் கொள்வார்.

அதேவேளை, கட்சிக்குள் இருக்கும் உள்ளுர் தலைவர் ஒருவருக்கு ‘காய்’ வெட்ட, தலைவர் ஹக்கீம் தீர்மானித்தால், அதே ஊரிலுள்ள எதிர் கட்சியிலிருக்கும் முக்கிய நபர் ஒருவரை கட்சிக்குள் நாசூக்காக சேர்த்து எடுத்துக் கொள்வார். பிறகு, முந்தியவரை பிந்தியவரைக் கொண்டு ‘வெட்ட’த் தொடங்குவார்.

இந்த ‘அக்கப்போர்’ தாங்க முடியாத விரக்தியின் ஒரு கட்டத்தில், முந்திய உள்ளுர் தலைவர் – கட்சியை விட்டு விலகுவார். பிறகு அந்த ஊருக்கான கட்சியின் அதிகாரம், பிந்தி வந்தவரின் கைகளுக்குச் செல்லும். இதுவும் கொஞ்சக் காலம்தான். பிறகு இவருக்குக் ‘காய் வெட்ட இன்னொருவரை புதிதாய் தலைவர் கொண்டு வருவார். இது தொடர் கதை.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். அவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் பெரிய பதவியில் இருந்தவர். அண்மையில் அதாஉல்லாவுடன் முரண்பட்டுக் கொண்டு கட்சியை விட்டும் பிரிந்து விட்டார்.

உதுமாலெப்பை ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர். எம்.எச்.எம். அஷ்ரப் காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பதவி வகித்தவர் உதுமாலெப்பை.

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இப்போது அதிகாரத்தில் இருப்பவர் ஏ.எல்.எம். நஸீர். இவர் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக உள்ளார். அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார் நஸீர்.

இந்த நிலையில்தான், உதுமாலெப்பையை கட்சிக்குள் எடுத்திருக்கிறார் ஹக்கீம். இனி புதியவர் வந்தால் முந்தையவருக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம் அல்லவா?

எனவே, முஸ்லிம் காங்கிரஸுக்குள் உதுமாலெப்பையின் வருகையினை நஸீர் தரப்பு அச்சத்துடனேயே பார்க்கிறது.

அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பையினுடைய வன்முறை அரசியலை எதிர்கொள்வதற்காக, அதே ரகத்திலுள்ள நபரொருவர் ஹக்கீமுக்கு தேவைப்பட்டார். அப்போது சிக்கியவர்தான் இப்போதைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்.

ஒரு காலத்தில் அட்டாளைச்சேனைக்குள் ஹக்கீம் காலடி வைப்பதற்கே அச்சப்பட்ட சூழ்நிலை இருந்தது. உதுமாலெப்பை தரப்பின் வன்முறை அந்தளவு கடுமையாக இருந்தது.

இதனைச் சமாளிப்பதற்காகத்தான் நஸீரை மு.கா. தலைவர் களமிறக்கினார்.

இப்போது முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைந்து விட்டார். இனி மு.கா.வுக்கு எதிரான வன்முறை அரசியல் அட்டாளைச்சேனையில் இருக்காது. அப்படியென்றால், இனி ஹக்கீமுக்கு நஸீர் தேவைப்பட மாட்டார்.

தேவையில்லாதவரை கழற்றி விடுவதுதானே அடுத்த கட்டம்?

இனி அதுதான் நடக்கும்.

எனவே, மு.காங்கிரஸுக்குள் பதவிகள் கேட்காமல், தலைவருக்கு கரைச்சல் கொடுக்காமல், அதிகாரத்துக்காக அடிபட்டுக் கொள்ளாமல், உதுமாலெப்பைக்குப் பின்னால் நின்று அரசியல் செய்வதென்றால் மட்டுமே, முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு ஓரமாகவேனும் நஸீர் குந்திக் கொண்டிருக்க முடியும்.

கசப்பாக இருந்தாலும் களநிலைவரம் இதுதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்